ஹாய் – திரைப்பட விமர்சனம்
காதல் திருமணம் செய்யவேண்டும் என்கிற நோக்கத்துக்காக ஊரைவிட்டு சென்னை வரும் நாயகன் கவினும்,கட்டாய திருமணத்தில் தப்ப சென்னைக்கு வரும் நாயகி நயன்தாராவும் சந்தித்திக் கொள்கிறார்கள்.கவினுக்கு நயன் மேல் காதல் வருகிறது.நயனுக்குக் காதலில் ஆர்வமில்லை.அதேநேரம்,இருவரும் கணவன் மனைவி போல சேர்ந்து வசிக்கும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.அந்தக் காலகட்டத்திலாவது கவினின் காதல் கைகூடியதா? இல்லையா? என்ன நடந்தது? என்கிற வினாக்களுக்கு விடையாக வந்திருக்கிறது ஹாய்.
நாயகன் கவின்,கொங்குத்தமிழ் பேசும் கோவை இளைஞராக நடித்திருக்கிறார்.காதலிக்கு ஒரு சிக்கல் எனும்போது அதிரடி முடிவெடுக்கும் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.அதில்,அவருடைய இயல்பான நடிப்பு,நகைச்சுவை கலந்த வசன உச்சரிப்புகள்,காதல் ஏக்கப்பார்வைகள் எனப் பலவகைகளிலும் நற்பெயர் பெறுகிறார்.
நாயகி நயன்தாராவை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்க்க முடிகிறது.பல வலிமையான கதாபாத்திரங்களை ஏற்று அவற்றில் திறம்பட நடித்து நற்பெயர் பெற்ற இவர் இந்தப்படத்தில்,படம் நெடுக மெல்லிய புன்னகையுடன் எளிய வேடமேற்று,படத்தில் கவினையும் வெளியில் இரசிகர்களையும் ஈர்க்கிறார்.
நாயகனின் தாயாக ராதிகா,தந்தையாக நடித்திருக்கும் கே.பாக்யராஜ் ஆகியோர் கொங்குமண்டல பெற்றோராகவே வாழ்ந்திருக்கின்றனர். நயன்தாராவின் அப்பாவாக,இயல்பாக நடித்திருக்கிறார் பிரபு.
சத்யன்,ஆதித்யா கதிர்,குரேஷி ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள்.விடிவி.கணேஷ்,பெப்சி விஜயன்,காவ்யா அறிவுமணி,மிர்ச்சி கெமி, அம்ருதா சீனிவாசன் ஆகியோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
சுகாசினி சிறப்புத்தோற்றத்தில் வருகிறார்.படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவு செய்திருக்கும் ராஜேஷ் சுக்லா,படத்தை வண்ணமயமாக்கியிருக்கிறார்.கவின் நயன் காட்சிகளில் இளமை ததும்ப வேண்டும் என்பதற்காக காட்சிகளின் வடிவமைப்பு ஒளியமைப்பு ஆகியனவற்றில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்.
இரசிக்க வைக்கும் பாடல்களைக் கொடுத்ததுடன் பின்னணி இசையில் திரைக்கதைக்குப் பெரும்பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜென்மார்ட்டின்.
இளைய சமுதாயத்தைக் குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் ஒரு விநாடி பிசகினாலும் அவர்கள் மனநிலை மாறிவிடும் என்பதை உணர்ந்து கவனமாகப் படத்தைத் தொகுத்திருக்கிறார் பிலோமின்ராஜ்.அதனால் படம் இயல்பாகவும் சுமுகமாகவும் போகிறது.
திடுக்கிடும் திருப்பங்கள்,அதிரடி மாற்றங்கள் என எதுவுமின்றி எளிமையான,அழகான காதல்கதையைச் சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணுஎடவன்.அவருடைய எண்ணத்தை ஈடேற்ற நாயகன் கவினும் நாயகி நயன்தாராவும் பெரும் துணையாக இருக்கிறார்கள்.
இளமையான,ஜாலியான,இதமான இந்தப்படம் உற்சாகமாகப் பொழுதைப் போக்க உகந்த படம்.
– இளமுருகன்














