ராம் அண்ட் லீலா – திரைப்பட விமர்சனம்
நடுத்தர வர்க்கத்து இளைஞனான ராம்,திருமணத்திற்காகப் பெண்தேடி பலமுறை நிராகரிக்கப்படுகிறான்.அவன் வாழ்வில் லீலா என்ற பெண் வந்தவுடன் காதல் மலர்கிறது.ஆனால்,லீலாவிற்கு மாலை 6 மணிக்கு மேல் வெளியில் வரக்கூடாது அல்லது பார்க்கக்கூடாது என்ற ஒரு வித்தியாசமான நிபந்தனையும் மர்மமும் உள்ளது.அது என்ன?அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ராம் அண்ட் லீலா.
தலைப்பில் இருக்கும் ராம் எனும் கதாபாத்திரம் நாயகன் ரியோராஜுக்கு.திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் அலைவது,ஒரு பேரழகியைக் காதலியாகப் பெறுவது,அதில் எதிர்பாராத சிக்கல் எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.அதில் சிறப்பாக நடித்திருக்கிறார் நாயகன் ரியோராஜ்.
நாயகியாக நடித்திருக்கும் வர்திகா,அழகுப்பதுமையாக வலம்வருகிறார்.நடிப்பிலும் தாழ்வில்லை.இவ்வளவு வெள்ளையாக ஒரு நாயகியை நடிக்க வைத்ததற்கு திரைக்கதையிலும் ஒரு நியாயம் இருக்கிறது.
நாயகனின் அப்பாவாக சேத்தன்,அம்மாவாக மாளவிகா அவினாஷ்,தங்கையாக தாபியா அபு,மாமனாக முனீஷ்காந்த்,நண்பராக பாலாஜி தியாகராஜன் தயாளன்,நாயகியின் அம்மாவாக தீபா வெங்கட்,மாமனாக மாகாபா,தாத்தாவாக காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் வரும் தீபாவெங்கட்டும்,தங்கையாக நடித்திருக்கும் தாபியாஅபுவும் கூடுதலாகக் கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுன்,உற்சாகமாக உழைத்து காட்சியனுபவம் கொடுத்திருக்கிறார்.அவருக்கு சவால் விடும்வகையில் காலநேரம் மற்றும் பாத்திரப்படைப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.அவற்றைச் சமாளித்திருக்கிறார்.
அங்கித்மேனன் இசையில் பாடல்கள் கேட்கலாம்.அவை தனியாக இல்லாமல் காட்சிகளோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.பின்னணி இசையும் தாழ்வில்லை.
படத்தொகுப்பாளர் ஒய்.என்.சி.சிவா,சுவாரசியமான இந்தத் திரைக்கதையைச் சரியாகத் தொகுத்துக் கொடுத்தால்தான் வரவேற்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்.ஆனாலும் சில இடங்கள் பலவீனமாக இருக்கின்றன.அவர் நினைத்திருந்தால் பலமாக்கியிருக்கலாம்.
எழுதி இயக்கியிருக்கிறார் இராமச்சந்திரன் கண்ணன்.சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் தமிழுக்குக் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்கிற பாரதியாரின் சொல்லை ஏற்றுச் செயல்பட்டிருக்கிறார்.
திரைகடலோடி எடுத்துக்கொண்ட கதையை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுக்க மெனக்கெட்டிருக்கிறார்.இந்தத் திரைக்கதைக்கேற்ப நடிகர் நடிகைகளைத் தேர்ந்தெடுத்ததிலேயே பாதிவெற்றி பெற்றுவிடுகிறார்.ராம் என்ற பெயர் இருந்தால் முன்னேறவே முடியாது என்ற வசனம் கவனிக்க வைக்கிறது.ஆறு மணிக்கு மேல் நடக்கின்ற,நம்பவியலாத இந்தக் கதையை முழுக்க நகைச்சுவை கலந்து சொல்வதன் மூலம் நம்பகத்தன்மை பெற்று இரசிகர்களை ஈர்த்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார்.அதற்கேற்ற பலனையும் பெற்றிருக்கிறார்.
– இளமுருகன்











