விமர்சனம்

கொம்பு சீவி – திரைப்பட விமர்சனம்

வைகை அணை கட்டியதால் வாழ்வாதாரத்தையும் பெற்றோரையும் இழந்த நாயகன் சண்முகபாண்டியன், ஊர் பெரியமனிதராக வலம்வரும் சரத்குமாருடன் இருக்கிறார்.எப்படியாவது பெரும் பணக்காரனாக வேண்டும் என்று சண்முகபாண்டியன் நினைக்கிறார்.அவர் நினைப்பைச் செயலாக்க சரத்குமார் உதவுகிறார்.இவர்கள் என்ன செய்கிறார்கள்? இவர்கள் நினைத்தது நடந்ததா? என்பதை முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களைக் கலந்து சொல்ல விழைந்திருக்கும் படம் கொம்பு சீவி.

நாயகனாக நடித்திருக்கும் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன், கிராமத்துக் காளை என்று சொல்லும் வகையில் ஆக்ரோசமாக இருக்கிறார்.காதல் காட்சிகளிலும் தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார்.உணர்ச்சிப்பூர்வமான நடிப்பிலும் குறைவில்லை.

படத்தின் இன்னொரு நாயகன் சரத்குமார்.நரைத்த தலை,மீசை என்று தோற்றத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டு நடித்திருக்கிறார்.அவருடைய கதாபாத்திரப் படைப்புக்கு அவருடைய பிம்பம் மற்றும் அனுபவ நடிப்பு பெரிதும் உதவியிருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை தார்னிகாவுக்கு காவல்துறை ஆய்வாளர் வேடம்.சீருடையில் இருக்கும்போது அதற்கேற்ற கம்பீரம் காட்டும் அவர் மற்ற நேரங்களில் இனிப்பான நாயகியாக இருந்து இளைஞர்களைக் கவர்கிறார்.

காவலர்களாக நடித்திருக்கும் காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், கல்கி ராஜா ஆகியோரை வைத்து நகைச்சுவை செய்திருக்கிறார் இயக்குநர்.

காவல்துறை அதிகாரியாக வரும் சுஜித் சங்கர், சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் விஜே ஐஸ்வர்யா, ராம்ஸ் ஆகியோர் நிறைவு.

படம் வண்ணமயமாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம்.

யுவன்ஷங்கர்ராஜா இசையில் பாடல்கள் தாழ்வில்லை இரகம், பின்னணி இசை கதைக்களத்துக்கேற்ப அமைந்திருக்கிறது.

படம் சுவாரசியாகமாகவும் வேகமாகவும் செல்ல வேண்டும் என்று பாடுபட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ்.

எழுதி இயக்கியிருக்கும் பொன்ராம், ஆழமான உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதைக்களம் மற்றும் மாந்தர்களை வைத்துக் கொண்டு அதை தன் வழக்கமான நகைச்சுவை பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார்.இரண்டும் முழுமையாகப் பொருந்திப் போகாமல் பல இடங்களில் தடுமாறியிருக்கிறது.

சரத்குமாரின் விவேகமும் சண்முகபாண்டியனின் வேகமும் படத்தைக் காப்பாற்றியிருக்கின்றன.

– இளையவன்

Related Posts