விமர்சனம்

மொத ராத்திரி – திரைப்பட விமர்சனம்

மணமகனுக்கே கடைசிவரை தெரியாமல்,மணமகளுக்குச் சுத்தமாகப் பிடிக்காமல் ஏற்பாடு செய்யப்படும் ஒரு திருமண நிகழ்வில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லி அதன்மூலம்,குடும்ப உறவுகள் உள்ளிட்ட மனிதமனங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை வெளிப்படுத்தியிருக்கும் படம் மொதராத்திரி.கிராமத்தில் நடக்கும் கதை என்பதால் பேச்சுவழக்கிலான இந்தப்பெயரை வைத்திருக்கிறார்கள் போலும்.

நாயகனாக நடித்திருக்கும் ரிஷிகாந்த்,விமானத்தில் வந்திறங்கியதும் இன்று திருமணம் என்று தெரியும்போது வெளிப்படுத்தும் அதிர்ச்சியிலிருந்து காதல்,காதல் தோல்வி,மணமகளின் மனமறிந்து அதிர்ச்சி என எல்லா இடங்களிலும் பொருத்தமாக நடித்து,நான் நாயகனாக நடிக்க முழுத்தகுதி உள்ளவன் என்று மெய்ப்பித்திருக்கிறார்.

நாயகி அனிஷ்மா,படத்தின் பெரும்பலம்.அவருடைய பாத்திரப்படைப்பு,அதில் அவருடைய நடிப்பு,அதிரடி ஏமாற்றத்தில் கலங்கி நிற்கும் தருணம்,ஆவேச நடனம் ஆகிய இடங்களில் தன் முத்திரையைப் பதித்து வரவேற்புப் பெறுகிறார்.

ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி.அவருக்காகவே எழுதப்பட்டதா?எழுதியதற்காக இப்படி மாறினாரா? என்று பட்டிமன்றமே நடத்தும் வகையில் அவருடைய வேடமும் நடிப்பும் அமைந்திருக்கிறது.

சேத்தன்,பக்ஸ்,சங்கீதா பாலன்,பானுப்பிரியா,வர்ஷினி கார்மேகம்,அப்துல் லீ,ஏ.வெங்கடேஷ் ஆகியோர் ஒவ்வொரு மனிதராக மட்டுமின்றி ஒவ்வொருவகை மனிதர்களின் பிரதிநிதிகளாகத் தோன்றியிருக்கிறார்கள்.

ஓர் உயர்நடுத்தட்டு திருமணவீடு அங்கு நடக்கும் நிகழ்வுகள் என கதைக்களம் அமைந்திருப்பது ஒளிப்பதிவாளர் சுரேந்தரன் பரஞ்சோதிக்கு மிகவசதி.படத்தை வண்ணமயமாக்கியதோடு இரவுக்காட்சிகளிலும் நேர்த்தியான ஒளியமைப்பு செய்து கவனிக்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் பரத்சங்கர்,கேட்டதும் பிடிக்கிற பாடல்களைக் கொடுத்ததோடு பல இடங்களில் பின்னணியாகவும் அவற்றைப் பயன்படுத்தி படத்தை இரசிக்க வைத்திருக்கிறார்.பின்னணி இசைக் கோர்ப்பும் திரைக்கதைக்கு இசைந்திருக்கிறது.

ஒருநாளில் நடக்கும் கதை,நிறைய கதாபாத்திரங்கள் ஆகிய சவால்கள் இருந்தாலும் அவற்றைச் சளைக்காமல் எதிர்கொண்டு படத்தைத் தொகுத்திருக்கிறார் அசோக் அர்ஜுனன்.படம் இலகுவாகவும் வேகமாகவும் செல்கிறது.

குடும்பத்தோடு சென்று பார்த்து இரசிக்கக்கூடிய ஒரு படத்துக்கு இப்படி ஒரு தலைப்பு வைத்திருப்பது பலவீனம்.குழந்தைகளுக்கு தலைப்பின் பொருளை பெற்றோர் எப்படி விவரிப்பர்? அதைத் தாண்டி,முதலிரவு வரையிலான ஒரு திருமண வீட்டு நிகழ்வுகளை மட்டுமே வைத்துக் கொண்டு சுவையான திரைக்கதையை எழுதி அதற்கேற்ப காட்சிகளை வடிவமைத்து முழுநீளப் படமொன்றைக் கொடுத்திருப்பது இயக்குநர் ராஜா கருப்பசாமியின் தனித்திறன் என்லாம்.

– இளையவன்

Related Posts