சினிமா செய்திகள்

லைகா மீது லோகேஷ்கனகராஜ் மாமனார் பகிரங்க குற்றச்சாட்டு – விவரம்

இயக்குநரும் நடிகருமான லோகேஷ் கனக்ராஜின் மாமனார் செளந்தரராஜன்.இவர் திரைத்துறையில் நீண்டகாலமாகப் பயணிப்பவர்.கேப்டன் கிரியேசன்ஸ் நிறுவனம் உட்பட சில நிறுவனங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணிபுரிந்தவர்.அவருடைய அண்மைய சமூகவலைதளப் பதிவு….

பிரம்மாண்டமான தமிழ்ப் படங்களைத் தயாரித்த லைக்கா நிறுவனம் கட்ந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் Frame to Fame எனும் தலைப்பில் குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்தது.
வித்தியாசமாக கதை சொல்லும் புது இயக்குநர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு லைக்காவின் தயாரிப்பில் திரைப்படங்களை இயக்க வாய்ப்பு அளிப்பதே இந்த போட்டியின் நோக்கம் எனச் சொல்லப்பட்டது!
லைக்கா நிறுவனத்தின் இந்த அறிவிப்பை நம்பி வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பலரும் சில ஆயிரங்கள் முதல் இலட்சங்கள் வரை முதல் முடக்கி குறும்படங்களைத் தயாரித்து லைக்கா நிறுவனத்துக்கு அனுப்பிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கும் நிலையில் லைக்கா நிறுவனம் அதைப்பற்றி எந்த அறிவிப்புகளையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது.
இவ்வாறு குறும்படம் தயாரித்து தம்பிகள் தங்கள் திறமையை நம்பி தங்கள் பொருளாதாரத் தகுதிக்கு மேலே கடனை வாங்கியும் பொருட்களை அடகு வைத்தும் குறும்படங்களைத் தயாரித்து லைக்காவுக்கு அனுப்பியிருக்கின்றனர்.
சரி லைக்கா இல்லை என்றால் வேறு நிறுவனத்தில் அந்த குறும்படங்களைக் காட்டி போகலாமே என்றால் ’தங்களது போட்டிக்கு அனுப்பிய குறும்படங்களை வேறு எவருக்கும் தரக்கூடாது’ என லைக்கா நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியிருப்பதாகச் சொல்கின்றனர்.
லைக்கா நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகொள்.தங்களுக்கு இந்த இளைஞர்கள் அனுப்பிய குறும்படங்களில் அவர்களின் கனவுகள் நம்பிக்கைகள் ஆகியவை மறைந்திருக்கின்றன.
லைக்கா நிறுவனம் தற்போது திரைப்படங்கள் எடுக்கும் திட்டங்கள் இல்லை என்றாலும்கூட நீங்கள் அறிவித்த அந்த குறும்படப் போட்டி முடிவுளையாவது அறிவித்து அந்த இளைஞர்களின் களைப்பை போக்கலாமே?

இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.

எதிர்கால இயக்குநர்களின் நிகழ்காலக் குமுறலை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.லைகா நிறுவனம் உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

– கதிர்

Related Posts