சினிமா செய்திகள்

தீ தளபதி பாடலுக்காக சிம்பு பெற்ற சன்மானம்

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது.

அண்மையில் ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே’ பாடல் காணொலி வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலை நடிகர் விஜய்யுடன் இணைந்து எம்.எம்.மானசி பாட, பாடல் வரிகளை விவேக் எழுதியிருந்தார்.

டிசம்பர் 4 அன்று இப்படத்தின் இரண்டாவது பாடலாக ‘தீ தளபதி’ என்கிற பாடல் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். விவேக் பாடலை எழுதியுள்ளார்.

இந்தப்பாடலைப் பாடியதோடு இதற்கான காணொலியிலும் தோன்றியிருக்கிறார் சிம்பு.

இதற்காக அவருக்கு சுமார் நாற்பது இலட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். விஜய்க்காக இதைச் செய்கிறேன் பணம் வேண்டாம் என்று சிம்பு சொன்னதாகவும் தயாரிப்பு நிறுவனம் வற்புறுத்தி அவருக்கு இந்தத் தொகையைக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்தப் பாடல் காணொலி உருவாக்க அமைக்கப்பட்ட அரங்கம், நடன இயக்குநர் சாண்டி சம்பளம் உட்பட சுமார் ஒரு கோடி செலவாகியிருக்கிறதாம்.

அதேசமயம் இதற்குக் கிடைத்துள்ள பெரும் வரவேற்பால் படக்குழு மொத்தமும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாம்.

Related Posts