சினிமா செய்திகள்

கனெக்ட் படம் எப்படி மாறுபட்டது? – இயக்குநர் அஸ்வின் சரவணன் பேட்டி

மாயா, கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் புதியபடம் கனெக்ட்.நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சத்யராஜ், இந்திநடிகர் அனுபம்கெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்ய பிரித்வி சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் அஸ்வின் சரவணன் கூறியதாவது….

பேய்ப்படங்கள் நிறைய வந்திருக்கின்றன அவற்றிலிருந்து இந்தப்படம் மாறுபட்டது.கொரோனா ஊரடங்குக் காலத்தில் எல்லோரும் தனித்தனியாக வீட்டுக்குள் இருந்தோம். அந்தக் காலகட்டத்தில் நடக்கிற மாதிரியான கதை.

இதுவரை நேரில் வந்து பேய் ஓட்டும் சாமியார்களைப் பார்த்திருப்போம், இந்தப்படத்தில் இணையம் மூலம் பேயுடன் உரையாடும் விசயம் புதிதாக இருக்கும். இந்திநடிகர் அனுபம்கெர் அந்த வேடத்தில் நடித்திருக்கிறார். ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் இந்தப்படத்தில் நடித்ததும் படத்தைப் பாராட்டியதும் மறக்கமுடியாதது.

ஹாரர் என்கிற உணர்வு அவசியமானது என்று கருதுகிறேன். ஏனெனில் எல்லோருக்குள்ளும் இருக்கும் பயத்தைக் கூட்டமாக உட்கார்ந்து போக்கிக் கொள்ளும் ஒரு வடிகாலாகக் கருதுகிறேன்.

நயன்தாரா, சத்யராஜ், வினய், ஹனியாநபிசா உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்துப் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

இயக்குநர் விக்னேஷ்சிவன் படத்தைச் சிறப்பாக உருவாக்க உதவி புரிந்ததுடன் படம் நன்றாக வந்திருக்கிறது என்று பாராட்டினார்.

படத்தில் பதினைந்து வயதுக் குழந்தைக்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருக்கிறார். இதை அவர் விரும்பியே செய்தார். படமாகப் பார்க்கும்போது நயன்தாராவுக்கு மிக நல்ல பெயர் பெற்றுத்தருவதாக இருக்கும்.

அதேபோல் சுமார் 99 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படத்தை இடைவேளை இல்லாமல் திரையிடத் திட்டமிட்டிருக்கிறோம்.திரையரங்குகளுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts