இயக்குநர் அவதாரம் எடுக்கும் விஜய் ஆண்டனி – ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு
2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்தனர்.
இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் விஜய் ஆண்டனிக்கு நல்ல வசூல் கிடைத்தது.
இந்நிலையில்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் ‘பிச்சைக்காரன் 2’ படத்துக்கான கதை, திரைக்கதையை விஜய் ஆண்டனியே எழுதியுள்ளார்.
அந்தப் படத்தை தேசிய விருது வென்ற ‘பாரம்’ படத்தின் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கவுள்ளார் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
அதன்பின்,இவ்வாண்டு மார்ச் மாதத்தில் கோடியில் ஒருவன் படத்துக்காக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் ஆண்டனி, இப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் மிகச் சிறப்பாகப் படத்தை எடுத்துள்ளார். அதனாலேயே என்னுடைய பிச்சைக்காரன் 2 படத்துக்கும் இவரையே இயக்குநராகத் தேர்வு செய்துள்ளேன் என்று கூறினார்.
இதனால் ப்ரியா கிருஷ்ணசாமி நீக்கப்பட்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்குவது உறுதியானது.
அதன்பின், பல மாதங்கள் கழித்து இன்று (ஜூலை 24,2021) காலை 11 மணிக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிச்சைக்காரன் 2 படத்தை தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் விஜய் ஆண்டனியே இயக்கவுள்ளார் என்று அறிவித்திருக்கிறார்.











