பிச்சைக்காரன் 2 பட இயக்குநர் ஆனந்தகிருஷ்ணன் மாற்றம் ஏன்? அவரே பதில் சொல்கிறார்
நடிகர் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளையொட்டி, இன்று (ஜூலை 24,2021) காலை 11 மணிக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிச்சைக்காரன் 2 படத்தை தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் விஜய் ஆண்டனி இயக்கவுள்ளார் என்று அறிவித்திருக்கிறார்.
2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்தனர்.
இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் விஜய் ஆண்டனிக்கு நல்ல வசூல் கிடைத்தது.
இந்நிலையில்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் ‘பிச்சைக்காரன் 2’ படத்துக்கான கதை, திரைக்கதையை விஜய் ஆண்டனியே எழுதியுள்ளார்.
அந்தப் படத்தை தேசிய விருது வென்ற ‘பாரம்’ படத்தின் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கவுள்ளார் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
அதன்பின்,இவ்வாண்டு மார்ச் மாதத்தில் கோடியில் ஒருவன் படத்துக்காக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் ஆண்டனி, இப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் மிகச் சிறப்பாகப் படத்தை எடுத்துள்ளார். அதனாலேயே என்னுடைய பிச்சைக்காரன் 2 படத்துக்கும் இவரையே இயக்குநராகத் தேர்வு செய்துள்ளேன் என்று கூறினார்.
இதனால் ப்ரியா கிருஷ்ணசாமி நீக்கப்பட்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்குவது உறுதியானது.
இப்போது அதிலும் மாற்றம்.
ஆனந்த கிருஷ்ணனுக்குப் பதிலாக விஜய் ஆண்டனியே இயக்கவுள்ளார் என்று அறிவிப்பு வந்திருக்கிறது.
ஏன் இந்த மாற்றம்? என இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனிடம் கேட்டபோது,
முதலில் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குவதாக இருந்தது. இப்போது உடனடியாக அந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.
ஆனால், நான் இப்போது வேறொரு படத்தின் வேலைகளில் இருக்கிறேன். அதனால் அந்தப்படத்தை இயக்க முடியாத சூழல். எனவே அவரே இயக்குகிறார் என்று சொல்கிறார்.
கோடியில் ஒருவன் என்ன ஆனது? நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறதே? எனக் கேட்டதற்கு, இது திரையரங்குகளுக்கான படம்.அதனால் திரையரங்குகளில் வெளியிடுவதற்கே முன்னுரிமை கொடுப்போம் என்கிறார்.











