September 12, 2026
விமர்சனம்

மகுடம் – திரைப்பட விமர்சனம்

நடுத்தர வர்க்க இளைஞன்,மிகப்பெரிய டான் ஆகிய இருவேடங்களில் விஷால் நடித்திருக்கிறார்.இவர்களில் டானின் மகன்தான் நடுத்தரவர்க்க விஷால் என்பதும் அப்பா அப்படி இருக்கும்போது மகன் இப்படி இருப்பது ஏன்? என்கிற கேள்விக்கான விடைதாம் மகுடம்.

மருந்துவிற்பனை பிரதிநிதியாக நடுத்தர வாழ்வு வாழும் விஷால்,ஒரு மகிழுந்து வாங்கப் போராடி புதிதாக வாங்கமுடியாமல் பழைய மகிழுந்தை வாங்கி அதில் மனைவி குழந்தைகளுடன் பயணிக்கும்போது மனைவியையும் மகளையும் ஒரு குழு சுட்டுக்கொல்கிறது.அதற்குக்காரணம் தன் தந்தைதான் என்று நினைத்து அவருடன் மோதுகிறார் மகன்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் திரைக்கதை.

இரண்டு வேடங்கள்,மூன்றுவித தோற்றங்கள் என படம் முழுக்க நிறைந்திருக்கிறார் விஷால்.அந்தந்த வேடத்துக்கேற்ப நடிக்கவும் செய்திருக்கிறார்.சண்டைக்காட்சிகளில் வழக்கம்போல் வரவேற்புப் பெறுகிறார்.

தந்தை விஷாலுக்கு இணையராக அஞ்சலியும் மகன் விஷாலுக்கு இணையராக துஷாரா விஜயனும் நடித்திருக்கிறார்கள்.இருவரில் பின்னவர் நடிப்புல் முன்னணியில் இருக்கிறார்.அஞ்சலி கொஞ்சம் அதிகமாகவே நடித்துவிட்டார்.

நகைச்சுவைக்கென தம்பிராமையா வேடத்தை வைத்திருக்கிறார்கள்.அவர் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்.

பதம்குமார்,ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட படத்தில் இருக்கும் மற்ற நடிகர்களும் அவரவர் வேலையைச் செய்திருக்கின்றனர்.

ரிச்சர்ட் எம்.நாதன்,அபிநந்தன் ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவாளர்களுக்கு சவாலான கதைக்களம்.அதற்கேற்ப காட்சிகளை வடிவமைக்க முயன்றிருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையிலும் கவனிக்க வைத்திருக்கிறார்.

சண்டைப்பயிற்சி இயக்குநர் திலீப்சுப்பராயனின் பங்கு இந்தப்படத்தில் அதிகமாக இருக்கிறது.அதுவே பலவீனமாகவும் இருக்கிறது.ஏகப்பட்ட சண்டைகள் கொலைகள் இரத்தங்கள்.

படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த்,இன்னும் கூடுதலாக உழைத்திருக்க வேண்டும்.அவர் சுணங்கியதால் படமும் சுணங்கிவிட்டது.

நடிகர் விஷால் முதன்முறையாக இயக்கியிருக்கிறார்.சீனாவில் வாகன உதிரிபாகங்கள் வருகின்றன அதைத் தடுக்கவேண்டும் என்றொரு விசயத்தை மையமாக வைத்துக்கொண்டு படத்தைக் கொண்டுபோயிருக்கிறார்.அதற்கான முன்கதை பின்கதை எல்லாம் சரியாக அமையாமல் படம் தடுமாறுகிறது.அப்பா மகன் இடையேயான பாசப்போராட்டம் பழையது என்றாலும் படத்தைப் பாதுகாக்கிறது.

மூன்றுமணிநேரம் தாண்டி படம் ஓடுவது பெரும் பலவீனம்.அரைமணி நேரத்துக்கு மேல் குறைத்திருந்தால் பலவீனங்களையும் குறைத்திருக்கலாம்.

– இளையவன்

Related Posts