விமர்சனம்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

இளம்தொழிலதிபர் சூர்யாவுக்கு திருமணத்தின் மீது தீராத வெறுப்பு.அவருடைய அம்மா ராதிகாவுக்கோ,மகன் திருமணம் செய்ய மறுப்பதால் வீட்டுக்கு வாரிசு இல்லாமல் போகிறதே என்று கடும்வருத்தம்.அம்மாவின் வருத்ததைப் போக்க திருமணம் செய்யாமலேயே ஒரு வாரிசை உருவாக்குகிறார் சூர்யா.அந்தக் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.அதிலிருந்து காக்க அதைப் பெற்றெடுத்தவரைத் தேடிச் செல்கிறார் சூர்யா.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

கடந்த சில படங்களாகவே வெவ்வேறு தோற்றங்களில் வந்துகொண்டிருந்த சூர்யாவை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயல்பான தோற்றத்தில் பார்ப்பதே நன்றாக இருக்கிறது.பணம் படைத்தவர்களின் பலம் பலவீனம் ஆகிய எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை ஏற்று அதற்கு முழுநியாயம் செய்யும் வகையில் நடித்து வரவேற்பைப் பெறுகிறார் சூர்யா.அம்மா பாசம்,குழந்தைப் பாசம் தொடர்பான காட்சிகளில் அவர் நடிப்பு கூடுதல் சிறப்பு.

நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு அழகு என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை.அவருடைய கதாபாத்திரம் பேரழகு.வயதுக்கு மீறிய முதிர்ச்சியான நடிப்பையும் வெளிப்படுத்தி வியக்க வைத்திருக்கிறார்.அவருடைய வசன உச்சரிப்புகள் மேலும் இரசிக்க வைக்கின்றன.

சூர்யாவின் தாயாக நடித்திருக்கும் ராதிகாவின் தேர்ந்த நடிப்பு,அவருக்கு நற்பெயர் பெற்றுத்தருவதோடு படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறது.

ரவீனாடண்டன் கதாபாத்திரம் மிகமுக்கியமானது.அதற்குப் பொருத்தமாக அவர் இருக்கிறார்.

ராஜிவ்மேனன்,சுனில்ரெட்டி உள்ளிட்டோரும் தங்கள் பங்களிப்பின் மூலம் திரைக்கதைக்கு வலுவூட்டியிருக்கிறார்கள்.

நிமிஷ்ரவியின் ஒளிப்பதிவில்,படம் மிகப்பெரிய பொருட்செல்வில் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பது புலனாகிறது.காட்சிகளின் வடிவமைப்பு தரமாக இருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசை படத்தை முன்னணிக்குக் கொண்டுவந்திருக்கிறது.

நவின்நூலி படத்தொகுப்பில் முதல்பாதி போவதே தெரியவில்லை,அதனுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாதி குறைவு.

எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கி அட்லூரி.திருமண உறவுகளில் இருக்கும் சிக்கல்கள் காரணமாக அதைவிட்டு விலகி ஓடும் கதாநாயகனை மையமாக வைத்துக் கொண்டு உறவுகள் குறித்து பெரியபாடமே எடுத்திருக்கிறார்.அவற்றை விரல்நீட்டிப் பேசும் வசனங்களாக வெளிப்படுத்திவிடாமல் காட்சிகளினூடே பார்வையாளர்கள் உணரும்படி வைத்திருக்கிறார்.ஒரு சில நெருடலான விசயங்களும் நெருடா வண்ணம் எழுதியிருப்பது பலம். குடும்பம் வேண்டாம் என்று நினைக்கும் நாயகனை வைத்துக் கொண்டு குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்தியிருக்கிறார்.இதற்காக சூர்யாவை தேர்ந்தெடுத்ததே அவருக்கு வெற்றி.

– இளையவன்

Related Posts