பகாசூரன் – திரைப்பட விமர்சனம்
சிவபக்தர் செல்வராகவன், அதிரடியாகச் சில கொலைகள் செய்கிறார். முன்னாள் இராணுவ அதிகாரி நட்டி, தன் அண்ணன் மகள் மர்ம மரணம் குறித்து விசாரிக்கிறார்.
ஒரு கட்டத்தில் இருவரும் இணைகிறார்கள்.அது எதனால்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் பகாசூரன்.
முந்தைய படங்களில் ஒரு சார்பெடுத்துப் பேசிய இயக்குநர் மோகன்ஜி, இந்தப்படத்தில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமான சிக்கலைப் பேச முன்வந்திருக்கிறார்.
மழைவிட்டாலும் தூறல் விடாது என்பது போல இதிலும் பிற்போக்கு எண்ணங்களை வசனங்களாக வைத்திருக்கிறார்.
இயக்குநராக இருந்தாலும் இந்தப்படத்தின் இயக்குநர் சொன்னதைச் செய்தால் போதும் என்கிற முடிவோடு நடித்திருக்கிறார் செல்வராகவன். சில இடங்களில் சிறப்பாகவும் சில இடங்களில் பொருந்தாமலும் இருக்கிறார்.
நட்டியின் பாத்திரப்படைப்பு பலவீனம் என்றாலும் தன் நடிப்பால் அந்தக்குறையை மறக்கச் செய்கிறார்.
தாராக்ஷி, ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டோர் தங்கள் வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
சாம்சிஎஸ் இசையில் பாபநாசம்சிவனின் பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசையில் பாத்திரங்களின் தன்மையை உணர வைக்கிறார்.
பரூக் ஜே பாட்ஷாவின் ஒளிப்பதிவில் தாழ்வில்லை.
தப்பும் தவறுமாகச் சொல்லப்பட்டிருந்தாலும் தொழிலநுட்பங்கள் பெண்களுக்கு எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதைப் பேசியிருப்பதால் கவனம் ஈர்க்கிறது படம்.
– குமார்