விமர்சனம்

ஐமா -திரைப்பட விமர்சனம்

ஐமா என்றால் கடவுள் சக்தி என்று பொருள்.ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் வகைப் படத்துக்கு இந்தப் பெயர் வைத்திருப்பது ஏன்? என்கிற கேள்விக்கு விடையாகப் படம் இருக்கிறது.

நாயகன், நாயகி ஆகிய இருவரையும் கடத்தி ஓரிடத்தில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்கிறார்கள்.அவர்கள் எதற்காகக் கடத்தப்பட்டார்கள்? என்பதற்குப் பதில் சொல்கிறது படம்.

சில காட்சிகளில் விஜய்யை நினைவுபடுத்துகிறார் நாயகன் யூனஸ்.துடிப்பான இளைஞராக வரும் அவர் கொடுத்த வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்.காதல் மற்றும் சண்டைக்காட்சிகளில் முனைப்பாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் எவ்லின் ஜூலியட் கவனம் ஈர்க்கிறார்.அடைபட்டுக் கிடக்கிற இடத்திலிருந்து தப்பிக்கும் காட்சிகளில் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.உதட்டோடு உதடு வைத்து நாயகனுக்கு முத்தம் கொடுத்து அதிர வைக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கிறார் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி.நடிக்கும் வாய்ப்பு அதிகமுள்ள குரூர குணம் கொண்ட அந்த வேடத்தை ஏற்று குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

அகில் பிரபாகரன்,ஷாஜி, ஷீரா,மேகா மாலு,மனோகரன் ஆகியோரும் தங்கள் இருப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

கே ஆர்.ராகுல் இசையில் படத்தில் மொத்தம் பத்து பாடல்கள் பெற்றிருக்கின்றன.இந்த வகைப் படங்களில் வேகத்தடையாக இருக்கும் என்று நினைத்து பாடல்களை வைக்கவே மாட்டார்கள். ஆனால் இவர்கள் பத்துப்பாடல்கள் வைத்திருப்பதே ஒரு சாதனைதான்.

ஒளிப்பதிவு செய்திருக்கும் விஷ்ணு கண்ணனுக்கு மிகவும் சவால் தரக்கூடிய குறுகிய படப்பிடிப்பு இடங்கள்தாம் அமைந்திருக்கின்றன. அவற்றை வைத்துக் கொண்டு நிறைவாகச் செய்திருக்கிறார்.

படத்தொகுப்பு செய்திருக்கும் அருண்ராகவ், இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்க வேண்டும்.

இப்படத்தை இயக்கியிருக்கும் ராகுல் ஆர்.கிருஷ்ணா, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும்போது அதிலிருந்து தப்பித்து உயிர் வாழவே எண்ணுவார்கள் என்கிற உளவியலை அறிவியல் புனைவாக மாற்றி ஆங்கிலப்படங்களின் பாணியில் கொடுக்க விழைந்திருக்கிறார்.

– சரண்

Related Posts