உத்தரவு மகாராஜா – திரைப்பட விமர்சனம்
ஒரு படத்தில் நாயகனுக்கு விநோதமான ஒரு நோய் இருப்பதாகச் சொல்லிவிட்டாலே இஷ்டத்துக்குக் கதை விடும் வாய்ப்பு கிடைத்துவிடும்.
ஆனால் இந்தப்படத்தில் அப்படி ஒரு நோயை வைத்துக்கொண்டே வித்தியாசமான திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ஆஷிப் குரைசி.
படத்தின் நாயகன் உதயாவுக்கு நடிப்பின் எல்லாப் பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள வேடம். அவரும் பல தோற்றங்களில் வந்து கொடுத்த வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய உழைப்பு தெரிகிறது.
படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் பிரபு. நாயகனை அவர் கொடுமைப்படுத்தும் விதம் புதிது. அது படம் விறுவிறுப்பாகச் செல்லப் பெரிதும் உதவுகிறது.காவல்துறை கண்டுபிடித்துவிட்டது என்று தெரிந்தபின்பும் அவர் இயல்பாக இருப்பது நம்பும்படியாக இல்லை.
புதுமுகம் ப்ரியங்கா நல்வரவு. பிரபுவுக்கும் அவருக்குமான காட்சிகள் அழகாக அமைந்திருக்கின்றன.
ஒருசில காட்சிகளில் வந்தாலும் மந்தில் நிறைகிறார் சேரா. அவருடைய குறும்புச் சிரிப்பும் கொங்குத்தமிழும் சிறப்பு.
ஸ்ரீமன், கோவைசரளா ஆகிய இருவருக்கும் பெரிய வேடங்கள்.பொருத்தமாக நடித்திருப்பதோடு அவ்வப்போது சிரிக்கவைக்கவும் செய்கிறார்கள்.
மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடம்ஸ், தனஞ்செயன், குட்டிபத்மினி உட்பட படத்தில் நிறைய நடிகர்கள. கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசையும் நன்று.
பாலாஜிரங்காவின் ஒளிப்பதிவு காட்சிகளின் தன்மைக்கேற்ப அமைந்திருக்கிறது.
உதயாவின் பாத்திரப்படைப்பு தொடக்கத்தில் எரிச்சலூட்டினாலும் போகப்போகக் கதைக்குள் இழுத்துச்சென்றுவிடுகிறது.
அவர் டிஐடி எனும் நோய் பாதித்தவர் என்பதால் இப்படியெல்லாம் நடக்கிறது என்று நினைக்கவைத்து ஏமாற்றியிருப்பது திரைக்கதையின் பலம்.
இறுதியில் நாயகனுக்கு ஏற்படும் முடிவு அறத்தின்பாற்பட்டதாக இருக்கிறது. நாயகனின் நிலைக்கு இந்தச் சமுதாயம்தான் காரணம் என்பதை விளக்கிச் சொல்லி அதை முழுக்க நியாயப்படுத்தாமல் படத்தை முடித்திருப்பது நல்ல விசயம்.
.











