தி ஸ்மைல் மேன் – திரைப்பட விமர்சனம்
ஒரு காவல்துறை அதிகாரி,சைக்கோ என்று சொல்லப்படும் தொடர் கொலைகள் செய்யும் மன்நோயாளியைத் துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்று சொன்னால் அது சாதாரணமாகிவிடும்.கொலையாளியைக் கண்டுபிடிக்கும் அதிகாரிக்கு வித்தியாசமான நோய் இருக்கிறது அது அல்சைமர் என்று சொல்லப்படும் ஞாபகமறதி நோய்.அந்தப் பாதிப்பு இருக்கும்போதே துப்பறிகிறார் என்று சொல்லியிருப்பதன் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் தி ஸ்மைல் மேன்.
சரத்குமாரின் நூற்றைம்பதாவது படம்.அந்தப் பெருமைக்குத் தக்கதான கதாபாத்திரம் அவருக்கு அமைந்திருக்கிறது.காவல்துறை அதிகாரி வேடம் என்பது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல். ஞாபகமறதி நோயுடன் போராடிக் கொண்டே துப்பறிவதிலும் தன் தனித்தன்மையைக் காட்டி வரவேற்புப் பெற்றிருக்கிறார்.
சரத்குமாரின் குழுவில் பணியாற்றும் காவலதிகாரிகளாக சிஜா ரோஸ், ஸ்ரீகுமார் ஆகியோரும் தங்கள் வேடத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இனியா இன்னும் கூடுதலாக வருவார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்.சுரேஷ் மேனன், நட்ராஜன், ராஜ்குமார், மலைராஜன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன்,சரத்குமாரையே இரசித்துப் படமாக்கியிருக்கிறார் போலும்.அவர் ஒவ்வொரு தோற்றத்திலும் கவர்கிறார்.
இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஸ்,இதுபோன்ற கதைகளுக்கு இசை முக்கியம் என்றறிந்து இசையமைத்திருக்கிறார்.அவருடைய பணியால் படபடப்பு கூடுகிறது.
படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் இன்னும் கொஞ்சம் கூர்மைப்படுத்தியிருக்கலாம்.
கமலா அல்கெமிஸ் எழுதிய கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்கள் ஷ்யாம் – பிரவீன் ஆகிய இரட்டையர்கள்.படத்தின் தலைப்புக்கு ஏற்ப கொலைகள் நடப்பதுபோல் காட்டுகிறார்கள்.அப்படிச் செய்யப்படும் கொலைகளுக்கான காரணங்கள் பலவீனமாக இருந்தாலும் துப்பறியும் காட்சிகளில் சுவாரசியத்தைக் கூட்டியிருப்பது பலம்.
சரத்குமாரின் கம்பீரத்திற்காகவே பார்க்கலாம்.
– இளையவன்











