தலைவி – திரைப்பட விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படம் என்று எல்லோரும் எதிர்பார்க்க, இப்படத்தில் இடம்பெறும் அனைத்தும் கற்பனையே என்று சொல்லிவிட்டுப் படத்தைத் தொடங்குகிறார்கள்.
அதற்கேற்ப திமுகவை தமிழக மக்கள் கழகம் என்றும் செயலலிதாவை செயா என்றும் கலைஞரை கருணா என்றும் எம்.ஜி.ஆரை எம்.ஜெ.ஆர் என்றும் ஆர்.எம்.வீரப்பனை ஆர்.என்.வீ என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
அதேபோல, நிஜத்தில் நிகழ்ந்தவற்றில் பல மாற்றங்களும் மற்றும் உண்மைத்தன்மையின்மையும் அதிகம் இடம்பெற்றிருக்கின்றன.
செயலலிதா வேடத்தில் நடித்திருக்கும் கங்கணா ரணாவத், அந்த வேடத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள முயன்றிருக்கிறார். உண்மை முகத்தையே பார்த்த நமக்கு இந்தத் திரைமுகம் கொஞ்சம் குறைவாகவே தெரிகிறது.
எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்திருக்கிறார் அரவிந்தசாமி. எம்ஜிஆரின் வண்ணம் அவரிடம் இருக்கிறது. உடல்மொழியில் இருக்கும் துறுதுறுப்பு இவரிடம் இல்லை.
ஆர்.எம்.வீரப்பன் வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி பெரும் வரவேற்பைப் பெறுகிறார். எம்.ஜி.ஆரின் பிம்பத்துக்கு நடிகைகளால் களங்கம் ஏற்படாமல் காப்பாற்றும் துடிப்பை நன்றாக வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்.
கலைஞர் வேடத்தில் வருகிறார் நாசர். செயலலிதா பற்றிய படம் என்பதால் கலைஞரின் எதிர்மறை பாவங்களை மட்டுமே வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு. அவற்றைச் சரியாகச் செய்திருக்கிறார்.
வி.என்.ஜானகியாக மதுபாலா, செயலலிதாவின் அம்மா சந்தியாவாக பாக்யஸ்ரீ, எம்.ஆர்.ராதாவாக ராதாரவி, வைகோவாக ஜெயக்குமார், வலம்புரிஜான் வேடத்தில் சண்முகராஜன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
விஷால்விட்டல் ஒளிப்பதிவில் படத்தின் வரலாற்றுத்தன்மையைத் தாண்டி இரசிக்கவைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை இயல்பு.
படத்தின் வசனங்களையும் பாடல்களையும் கார்க்கி எழுதியிருக்கிறார்.அவருடைய இளமையும் படத்தின் கதைக்களமும் பல இடங்களில் முட்டிக்கொள்கின்றன.
உலகம் அறிந்த ஒரு வாழ்க்கையை யாருக்கும் வலிக்காமல் சொல்லவேண்டும் என்பதால் நிறையச் சிக்கல்களை எதிர்கொண்டிருப்பார் இயக்குநர் விஜய்.
எப்படியிருப்பினும், ஒரு திரைப்பட நடிகையாக அறிமுகமாகும் சிறுமி (பதினைந்து வயது என்றால் சிறுமிதானே) படிப்படியாகச் சென்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்வது வரையிலான ஏற்றங்கள் இறக்கங்கள், பலம் பலவீனம் ஆகியனவற்றோடு சேர்த்துக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது படத்துக்குப் பலம்.











