விமர்சனம்

லாபம் – திரைப்பட விமர்சனம்

படம் தொடங்கும்போதே ஒரு சுமையுந்தில் வந்திறங்குகிறார் விஜய்சேதுபதி. அவரை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர், முடிஞ்சா பார்க்கலாம் என்று சொல்ல அதற்கு, முடியும் பார்க்கலாம் என்று அதீத தன்னம்பிக்கையோடு சொல்கிறார் விஜய்சேதுபதி.

படம் முழுக்க இது தொடர்கிறது. மிக ஆழமான விசயங்களை அழுத்தந்திருத்தமாகச் சொல்லிச் செல்கிறார்கள்.

பக்கிரி என்கிற பெயருக்கேற்ப தாடி மீசையோடு அறிமுகமாகும் விஜய்சேதுபதி அதன்பின் இயல்பான தோற்றத்தில் வலம்வருகிறார்.

எம்ஜிஆர் பாடல் எம்ஜிஆரின் வாகன எண், பெருவயலில் இருந்து நீலகிரி தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டத்துக்காகப் போவதன் மூலம் சேகுவாரா நினைவு இவற்றைத் தாண்டி வாட்டாக்குடி இரணியன் போல் வெளிநாடு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்தல் என கலந்துகட்டி அடிக்கிறார் விஜய்சேதுபதி.

நாயுகி ஸ்ருதிஹாசன் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளில் நாயகனுக்கு உதவியாக வந்து போகிறார்.

இயற்கை மற்றும் விவசாயத்தை அழிக்கும் வண்ணம் பயோடீசல் தொழிற்சாலை அமைக்கும் கார்ப்பரேட் முதலாளியாக வருகிறார் ஜெகபதிபாபு.

அழகன்தமிழ்மணி, சண்முகராஜன், ஓஏகே சுந்தர், வின்செண்ட் அசோகன் ஆகியோர் குறுமுதலாளிகள் வேடத்தில் வருகிறார்கள். தாங்கள் பெரிய முதலாளிகள் என்கிற எண்ணத்தில் தொழிலாளர் விரோதப் போக்கைக் கடைபிடிக்கும் அவர்கள், ஒரு கட்டத்தில் கார்ப்பரேட் என்பது நம்மையும் விழுங்கும் பூதம் என்பதை உணர்வது சிறப்பு.

விஜய்சேதுபதியின் நண்பர்களாக வரும் ரமேஷ்திலக், பிருத்விராஜன், ஜெயவர்மன், கலையரசன், டேனி, நிதீஷ்வீரா, தமிழ் ஆகியோர் ஒற்றுமையாகச் செயல்பட்டு எல்லோருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்கள்.

ராம்ஜியின் ஒளிப்பதிவில் வயலும் வயல் சார்ந்த இடங்கள் மற்றும் சில காட்சிகளின் வடிவைப்பு ஈர்க்கிறது.

இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் தாழ்வில்லை.

விவசாயம், பொருளாதாரம், பஞ்சமி நில மீட்பு, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது அல்லது குத்தகைக்கு விடுவதில் நடக்கும் உள்ளடி வேலைகள் உட்பட ஏராளமான செய்திகளை இயன்ற அளவு எளிமையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.

சிக்கல்களை மட்டும் பேசாமல் அதற்குத் தீர்வாக கூட்டுப்பண்ணைத் திட்டத்தை முன்வைக்கிறார்.

அத்திட்டத்துக்கு தோழர் பி.சீனிவாசராவ் கூட்டுப்பண்ணைத் திட்டம் என்று பெயர் வைத்து பொதுவுடைமை இயக்கத்தின் ஈகிகளைப் பெருமைப்படுத்தியிருக்கிறார்.

கடைசியில் வில்லன் ஜெகபதிபாபுவுக்கு ஏற்படும் கதி பயத்தை ஏற்படுத்துகிறது. கொஞ்சம் நிதானித்துக் காட்சிப்படுத்தியிருந்தால் உதிரிப்பூக்களுக்குப் பிறகு நினைவில் நிற்கும் க்ளைமாக்ஸாக இருந்திருக்கும்.

ஆனாலும் இப்பட வில்லனுக்கு நடப்பது போல் உண்மையில் நடந்தால் நாடு நன்றாக இருக்கும்.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் அழுத்தமான பதிவு.

மக்களுக்கு இலாபம்.

Related Posts