December 11, 2025
விமர்சனம்

ரஜினி கேங் – திரைப்பட விமர்சனம்

நாயகன் ரஜினி கிஷனும் நாயகி த்விவிகாவும் காதலிக்கிறார்கள் ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்கிறார்கள்.அந்தக் கல்யாணம் நடந்த பின் பல திடுக்கிடும் திருப்பங்கள் நடக்கின்றன.அவை என்ன? அவற்றின் முடிவென்ன? என்பதைச் சொல்வதுதான் ரஜினி கேங் படம்.

நாயகனாக நடித்திருக்கும் ரஜினி கிஷன், அறிமுக நடிகர் போல் இல்லாமல் நடனம்,சண்டை என எல்லாவற்றிலும் சரியாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.அறிமுக நடிகர்கள் தொடத் தயங்குகிற நகைச்சுவைக் காட்சிகளிலும் நன்றாக நடித்திருப்பது சிறப்பு.

நாயகியாக நடித்திருக்கும் த்விவிகா,பார்த்தவுடன் ஈர்ப்பவராக இருக்கிறார்.அது மட்டுமின்றி, படத்தின் கதைக்கேற்றவராகவும் இருப்பது படத்துக்குப் பலம்.அதோடு காட்சிக்கு என்ன தேவையோ அந்த அளவு மட்டும் நடித்திருப்பது கூடுதல் பலம்.

முனீஸ்காந்த்,மொட்டை ராஜேந்திரன்,கூல் சுரேஷ்,கல்கி ராஜா ஆகியோரில் நேர்மறையாக முதலிருவர் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள்.அடுத்த இருவர் எதிர்மறையாக நடித்து சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள்.எல்லோரிடமும் மிகை நடிப்பு இருப்பது பலவீனம்.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ் குமார், படம் வண்ணமயமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து வேலை செய்திருக்கிறார்.பாடல் காட்சிகளில் இன்னும் தூக்கல்.

எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார்.வியாபார அம்சங்கள் கொண்ட ஒரு படத்திற்கு என்னென்ன வகைப் பாடல்கள் தேவையோ அவற்றையெல்லாம் போட்டுக் கொடுத்திருக்கிறார்.பின்னணி இசையிலும் தாழ்வில்லை.

ஆர்.கே.வினோத் கண்ணா படத்தைத் தொகுத்திருக்கிறார்.சில இடங்களில் கூடுதலாகக் கத்தரி போட்டிருக்கலாம் என்று எண்ண வைக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.ரமேஷ்பாரதி, படம் முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து இயக்கியிருக்கிறார்.அதற்காகவே முனீஷ்காந்த்தை தூங்கி வழிபவராகவும் மொட்டை ராஜேந்திரனை ஆவிகள் மையம் நடத்துபவராகவும் வடிவமைத்திருக்கிறார்.

ரஜினி பிம்பத்தின் துணையுடன் திகில் மற்றும் நகைச்சுவைப் படங்களுக்குரிய அம்சங்கள் அனைத்தையும் கலந்து கொடுத்து சிரிக்க வைக்க மெனக்கெட்டிருக்கிறார்.

– இளையவன்

Related Posts