October 17, 2026
Uncategorized விமர்சனம்

பபூன் – திரைப்பட விமர்சனம்

நாடகங்களில் பபூன் எனப்படும் கோமாளி வேடம் போடும் வைபவ், நாடகக் கலை நலிந்து வருவதால் அத்தொழிலை விட்டு வெளிநாடு போய்ப் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார். வெளிநாடு செல்வதற்கான பணம் சேர்க்க ஓரிடத்தில் சுமையுந்து ஓட்டுநர் பணிக்குச் செல்கிறார்.

உப்பென்று நினைத்து அவர் ஓட்டிவந்த சுமையுந்தில் போதைப்பொருள் இருக்கிறது. அதன்பின் அவர் வாழ்க்கையில் பல திருப்பங்கள். அவற்றையெல்லாம் எப்படி எதிர்கொள்கிறார்? கடைசியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் பபூன் படம்.

வைபவ் கோமாளி வேடத்துக்கு ஏற்ப இருக்கிறார். பயப்பட வேண்டிய காட்சிகளிலும் பதறாமல் இருக்கிறார். சண்டைக் காட்சிகளில் முன்னேறியிருக்கிறார்.

படம் முழுக்க வைபவ் கூடவே வருகிறார் பாடகர் ஆத்தங்குடி இளையராஜா. அவர் சில நேரங்களில் சிரிக்க வைக்கிறார்.

ஈழத்தமிழ் ஏதிலிப் பெண்ணாக நாயகி அனகா நடித்திருக்கிறார். தன்மானமிக்க தமிழச்சியாக அவர் காட்டும் கோபம் இரசிக்க வைக்கிறது.

அரசியல் தலைவர்களாக வரும் ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், ஆடுகளம் நரேன் ஆகியோர் தற்கால அரசியல்வாதிகளை நினைவுபடுத்துகிற வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

காவல்துறை அதிகாரியாக வரும் தமிழரசன் அதற்கேற்ற மிடுக்குடன் இருக்கிறார். எல்லோரும் தேடும் பெரும்புள்ளி வேடத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மிரட்டுகிறார். அவர் வரும் காட்சிகள் இன்னும் கொஞ்சநேரம் நீடிக்காதா? என நினைக்க வைக்கிறது.

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு கடற்கரையோரங்களை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

சந்தோஷ்நாராயணனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் பிழையில்லை.

நாடகக் கலையின் நிலை, தற்கால அரசியலின் குறுக்கு வெட்டுத் தோற்றம், ஈழ ஏதிலிகளின் வாழ்நிலை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான விசயங்களைத் திரைக்கதையில் சேர்த்திருக்கிறார் இயக்குநர் அசோக்வீரப்பன்.

நாயகியிடம் காவல்துறை அதிகாரி,நான் நினைத்தால் உன்மேல் எவ்வளவு வழக்குகள் போடலாம் தெரியுமா? என்று கேட்குமிடத்தில் ஏதிலிகளுக்கு எவ்வளவு உரிமைகள் இருக்கிறது தெரியுமா? என்று திருப்பிக் கேட்கிறார் நாயகி.

நாம் நினைத்தால் தனபாலைக் (ஜோஜுஜார்ஜ்) கைது செய்திருக்க முடியாதா? என்று காவலர் கேட்கும்போது, நாம் உண்மையாகக் கைது செய்வதானால் சி.எம்மையும் மத்திய அமைச்சரையும் கைது செய்திருக்க வேண்டும் என்கிறார் அதிகாரி.

உனக்கு இந்த ஆசை தேவையா? என்று கண்ணாடி முன் நின்று தன்னைத் தானே திட்டிக்கொள்கிறார் வைபவ்.

இக்காட்சிகள் எல்லாம் இயக்குநரின் உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

Related Posts