பூம் பூம் காளை – திரைப்பட விமர்சனம்
புதுமணத் தம்பதி கெவின் சாரா தேவா தேனிலவுக்குச் செல்கின்றனர். போன இடத்தில், நாம மொதல்ல பழகுவோம், அப்புறம்தான் அதெல்லாம் என்கிறார் நாயகி சாரா தேவா.
பேரதிர்ச்சி அடையும் நாயகன் என்ன செய்தார்? அடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் பூம்பூம் காளை.
நாயகன் கெவின் அப்பாவித் தோற்றம் தருகிறார். நன்றாக நடனமாடுகிறார். நடிப்பில் இன்னும் முன்னேற்றம் வேண்டும்.
நாயகி சாராதேவா அழகாக இருக்கிறார். நடிக்கவும் முயன்றிருக்கிறார்.
அப்புக்குட்டி, காதல் அருண் ஆகியோரை வைத்துக்கொண்டு சிரிக்க வைக்க நினைத்திருக்கிறார்கள். பல இடங்களில் பலிக்கவில்லை.
ஆர்.சுந்தர்ராஜன் சச்சு ஆகியோர் பொறாமை கொள்ள வைக்கும் இணையாக வருகிறார்கள்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அபிநயஶ்ரீயும் அமைச்சரும் ஏதோ பெரிதாகச் செய்யப்போகிறார்களோ? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றுகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் திருமண பந்தங்கள் விரைவில் முறிந்து போவது ஏன்? அதைத் தடுத்து அதற்கான நிரந்தரத் தீர்வு சொல்லவேண்டும் என்று இயக்குநர் ஆர்.டி.குஷால்குமார் நிறைய யோசித்திருக்கிறார்.
அவற்றில் பாதியைத் திரைமொழியாக மாற்றியிருந்தால் கூட பூம் பூம் காளை முரட்டுக்காளையாகியிருக்கும்.











