விமர்சனம்

கணேசாபுரம் – திரைப்பட விமர்சனம்

மதுரை மண் வாசத்தோடு வீரம், காதல், நட்பு ஆகியனவற்றைப் பேசும் படம்தான் கணேசாபுரம். அக்கிராமத்தைச் சேர்ந்த சின்னா, ராஜ் பிரியன் மற்றும் காசிமாயன் மூவரும் நெருங்கிய நண்பர்கள். திருட்டையே தொழிலாகச்செய்யும் பசுபதிராஜிடம் திருடர் வேலை செய்கிறார்கள்.

அதனால் சிக்கலுக்கு ஆளாகின்றனர். அதேநேரம் நாயகன் சின்னாவுக்குக் காதல் வருகிறது. ஒரு பக்கம் பகை இன்னொரு பக்கம் காதல் இவற்றிற்கிடையே நட்பு ஆகியனவற்றைக் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. தொண்ணூறுகளில் நடக்கும் கதை என்பது கதைக்களத்துக்குப் பலம்.

நாயகனாக நடித்திருக்கும் சின்னாவுக்கு இது முதல் படம்.சண்டை, காதல் ,பாசம் ஆகிய எல்லா உணர்வுகளையும் காட்டக்கூடிய வேடம். சில காட்சிகளில் அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல நடித்திருக்கிறார்.சில காட்சிகளில் புதியவர் என்பது தெரிகிறது.

திருடனாக இருந்தாலும் நாயகனைச் சுற்றிச் சுற்றி வந்து காதலிக்கும் நாயகியாக நடித்திருக்கிறார் ரிஷா ஹரிதாஸ். இருட்டுக்கு நடுவில் வெளிச்சம்போல் படத்தில் இருக்கிறார்.

காசிமாயன், ராஜசிம்மன், பசுபதி ராஜ், கயல் பெரரா ஆகியோர் கொடுத்த வேடங்களுக்கு ஏற்ப நடித்து கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ராஜா சாயின் இசையில் பாடல்கள் கேட்கலாம், பின்னணி இசை அளவு. பி.வாசுவின் ஒளிப்பதிவு மண்ணின் மணத்தை வெளிப்படுத்தும்விதமாக இருக்கிறது.

திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் வீராங்கன்.கே.திரைப்படங்களுக்குத் தேவையான நட்பு, பகை,காதல், நகைச்சுவை ஆகிய அம்சங்களைக் கலந்து திருட்டையே தொழிலாகக் கொண்ட ஒரு சமூகத்தின் சிக்கலை வெளிப்படுத்தியிருக்கிறார். அடிநாதமாக அந்தச்சிக்கலை வைத்துக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதால் கவனம் ஈர்க்கும் படமாக அமைந்திருக்கிறது.

Related Posts