ஜாக்பாட் – திரைப்பட விமர்சனம்
மணிமேகலைக் காப்பியத்தில், அட்சயபாத்திரம் என்றும் அமுதசுரபி என்றும் அழைக்கப்படும் ஒரு பாத்திரம் இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாமல் அமுதம் வரும் என்பது அதன் சிறப்பு.
அந்தப்பாத்திரம் 2019 ஆம் ஆண்டு ஒருவர் கையில் கிடைத்தால்,
அவர்,
ஆற்றுநர்க்கு அளிப்போர், அறவிலை பகர்வோர்,
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை.
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
என்கிற பாடல் வரிகளுக்கு ஏற்ப நடந்துகொண்டால் எப்படி இருக்கும்? என்கிற சுவையான கற்பனையின் திரைவடிவமே ஜாக்பாட்.
பெரிய கதாநாயகர்களுக்குச் சவால் விடும் வகையில் தொடங்கும் அறிமுகக் காட்சியிலிருந்து படம் நெடுக நிறைந்திருக்கிறார் ஜோதிகா. ஆட்டம், பாட்டம், சண்டை ஆகிய எதையும் விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் சிரத்தையுடன் செய்திருக்கிறார்.
மனநிலை சரியில்லாதவர் என்றதும் அதுபோல இருப்பது நாய்க்குட்டி என்றதும் அதுபோலவே செய்வது ஆகிய இடங்களில் நல்ல நடிகை என்பதை நிருபிக்கிறார்.
படம் முழுக்க ஜோதிகாவுடன் இணைந்திருக்கிறார் ரேவதி. அவரும் ஜோதிகாவும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
ஆனந்தராஜ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெண் காவல் ஆய்வாளர் வேடத்தில் மிரட்டுகிறார். நான் கன்னிப் பெண்ணாகவே இருந்துட்டுப் போறேன் என்று அவர் சொல்லும்போது திரையரங்கு சிரிப்பில் அலறுகிறது.
நான்கடவுள் ராஜேந்திரன், தங்கதுரை, கிங்ஸ்லி, மன்சூர் அலிகான் ஆகியோர் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்கள். மனோபாலா பற்றிய இரகசியம் கடையில் அவிழும்போது ஆச்சரியம்.
யோகிபாபு வேடம் மிகவும் புதிது. சுவாரசியம்.அந்த வேடத்தை வைத்துக் கொண்டு உருவகேலிகளுக்குச் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
பாடகர் அந்தோணிதாசன்,பழம்பெரும் நடிகை சச்சு ஆகியோரின் வேடங்கள் கதையை நகர்த்துகின்றன. சிறப்புத்தோற்றத்தில் வருகிற சமுத்திரக்கனி ஓரமாகப் பயன்பட்டிருக்கிறார்.
ஆர்.எஸ்.ஆனந்தகுமார் ஒளிப்பதிவில் ஜோதிகா மிக அழகாக இருக்கிறார்.ஜோதிகாவின் அறிமுகக் காட்சி மற்றும் சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைய அவரும் காரணம். பாடல்களை வண்ணமயமாகப் படமாக்கியிருக்கிறார்.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசையில் சில இடங்களில் சாதிக்கிறார் பல இடங்களில் சோதிக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் கல்யாண். படம் முழுக்க நகைச்சுவை என்பது அவருடைய இலக்கு. அவர் நினைத்தது சில இடங்களில் நடக்கிறது. பல இடங்களில் சறுக்கியிருக்கிறார்.
படம் முடிகிற நேரத்தில் எழுத்து போடுகிறார்களே என்று எழுந்து வந்துவிடாதீர்கள், எழுத்து ஓடும் கடைசி சில நிமிடங்களில் பல திருப்பங்கள் நடக்கின்றன். அவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.