விமர்சனம்

மாநாடு – திரைப்பட விமர்சனம்

ஒரு நாள் திரும்பத் திரும்ப வந்தால், அந்த ஒருநாள் தமிழகத்தில் மிகப்பெரிய மதக்கலவரத்தையும் முதலமைச்சர் மாற்றத்தையும் ஏற்படுத்தும் நாளாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதை வேகமும் விறுவிறுப்புமாகச் சொல்லியிருக்கும் படம் மாநாடு.

தமிழுக்கு இது புதிதென்றாலும் ஆங்கிலத்தில் இதுபோல் நிறையப்படங்கள் வந்திருக்கின்றன. அப்படங்களின் பெயரை சிம்புவையே சொல்ல வைத்து மற்றவர்களுக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார்  வெங்கட்பிரபு.

துபாயிலிருந்து வரும் அப்துல்காலிக்காக அறிமுகம் ஆகும் காட்சியிலிருந்து கடைசிவரை திரைக்கதையோடு நூற்றுக்கு நூறு பொருந்துவதோடு தம் இரசிகர்களையும் நூறு விழுக்காடு திருப்திப்படுத்தியிருக்கிறார் சிம்பு. 

கட்டிப்போடப்பட்டிருக்கும் காட்சிகளில் தலைவரே தலைவரே என்று அதகளம் செய்வதும், நண்பனின் இழப்புக்காகக் கதறி அழுவதும் மிகச்சிறப்பு.

இன்னொரு பக்கம் நடிப்பு இராட்சசனாக அட்டகாசம் செய்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவர் வரும் காட்சிகளீல் அரங்கங்கள் அதிர்கின்றன.

நாயகி கல்யாணி, பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி ஆகியோர் ஒரேநாள் திரும்பத் திரும்ப வரும் திரைக்கதை புண்ணியத்தால் படம் முழுக்க வந்து கொண்டிருக்கிறார்கள். சின்னச் சின்னப் புன்னகைகளால் கவனம் ஈர்த்திருக்கிறார் கல்யாணி.

ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், வாகை சந்திரசேகர் ஆகியோர் அரசியல்தலைவர்களாகப் பொருந்தியிருக்கின்றனர்.

ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் படத்தின் வேகம் கூடியிருக்கிறது.

பிரவீன்கேஎல் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இவ்வளவு சிக்கலான திரைக்கதையை எல்லோருக்கும் புரியும்படி தொகுத்துக் கொடுத்து வெற்றிக்குப் பெரிதும் உதவியிருக்கிறார்.

யுவனின் இசையில் மெஹரிசைலா பாடல் சிறப்பு. பின்னணி இசை யில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். 

மது மாது ஜாலி வகைப்படங்கள் மட்டுமல்ல இதுபோன்ற படங்களைச் செய்யவும் நான் தகுதியானவன் என நிரூபித்திருக்கிறார் வெங்கட்பிரபு. இதன் திரைக்கதையில் அவருடைய உழைப்பு அபரிமிதம்.

ஹீரோயிசம் நிறைந்த சுவையான கற்பனைக் கதைக்குள் இஸ்லாமிய சமுதாயத்தின் மேல் அதிகாரவர்க்கம் காட்டும் வனமத்தைத் தோலுரித்துக் காட்டி அதற்குக் கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்து சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தியிருக்கும் சிம்புவின் தெம்புக்கு வாழ்த்துகள்.

மகாநாடு.

Related Posts