சார்லிஸ் ஏஞ்சல்ஸ் – விமர்சனம்
ஆக்ஷன் படங்கள் நாயகர்களுக்கு மட்டும்தான் என்பதை உடைத்தெறிந்த ஹாலிவுட் படம்தான் சார்லிஸ் ஏஞ்சல்ஸ். நாயகிகள் செய்யும் ஆக்ஷன் அதகளமான சார்லிஸ் ஏஞ்சல்ஸ் ரசிகர்களை ஈர்த்ததா?
சார்லிஸ் ஏஞ்சல்ஸ் என்பது ஸ்பை த்ரில்லர் திரைப்படம். 1970களில் டிவி தொடராக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர், ஹாலிவுட்டில் திரைப்படமாக 2000த்தில் முதல் பாகம் வெளியானது. பிறகு, 2003ல் இரண்டாம் பாகம் வெளியானது. 16 வருடங்கள் பிறகு, மூன்றாவது சீக்குவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
கிரிமினல் குற்றங்களைத் தடுக்க பெண் உளவாளிகளைக் கொண்டு சீக்ரெட் ஏஜென்ஸியை நடத்தி வருகிறது டவுன்செண்ட். பிராக்ஸ் நிறுவனம் உலகிலேயே சக்தி வாய்ந்த எலெக்ட்ரானிக்கல் டிவைஸ் ஒன்றை கண்டுப்பிடிக்கிறது. அதை தவறாக பயன்படுத்தினால் பெரிய ஆபத்தை விளைவிக்கும். இதை கள்ள மார்கெட்டில் விற்க நினைக்கிறது ஒரு டீம். அந்த டிவைஸ் கண்டுபிடித்த நாயகி நவொமி ஸ்கார்ட் அதை தடுக்க டவுன் செண்ட் ஏஜெண்டை அணுகுவார். சார்லிஸ் ஏஞ்சல்ஸ் அந்த டிவைஸை கைபற்றினார்களா, கிரிமினல்களைப் பிடித்தார்களா என்பதே மீதிக் கதை.
படத்தில் ஏஞ்சல்களாக நவொமி ஸ்காட், க்ரிஸ்டன் ஸ்டூவர்ட், எல்லா பலின்ஸ்கா மூவரும் நடித்திருக்கிறார்கள். ட்விலைட் நாயகி கிரிஸ்டன், அலாவுதீன் நாயகி நவொமி மற்றும் பிரிட்டிஷ் நடிகை எல்லா என உச்ச நடிகைகள் ஒரே படத்தில் இருப்பது படத்துக்கு கூடுதல் பலம். முதல் இரண்டு பாகங்களில் கேமரூன் டயஸின் இடத்தை இந்த மூன்று பேருமே கச்சிதமாக நிரப்பியிருக்கிறார்கள். நடிப்பிலும், கவர்ச்சியிலும், ஆக்ஷனிலும் என படத்துக்கு தேவையானவற்றை அழகாகவே செய்திருக்கிறார்கள்.
ஹாலிவுட்டின் அதே வழக்கமான ஆக்ஷன் ஹீரோ கதை தான். குறிப்பாக 2000த்தில் வெளியான சார்லிஸ் ஏஞ்சல்ஸ் படத்தின் ரீபூட் வெர்ஷன் தான் இது. கதையில் புதுமை இல்லையென்றாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் செய்திருக்கிறார்கள். இந்த மாதிரியான ஆக்ஷன் படங்களில் புதுமையான சண்டைக்காட்சிகள், சேசிங் சீன்கள் மற்றும் காமெடி டிராக்குகள் அவசியம். இவை இந்தப் படத்தில் சிறப்பாகவே வந்திருக்கிறது.
இஸ்தான்புல், நியூயார்க் என பல நாடுகளுக்கு படம் பயணமாகிறது. வித்தியாசமான லொக்கேஷன்களில் படத்தை காட்டியிருப்பது சுவாரஸ்யமான ஒன்று.

முதன்மை கதாபாத்திரம் மட்டுமல்ல, படத்தை இயக்கியிருப்பதும் பெண் இயக்குநரான எலிசபெத். பாஸ்லி கேரக்டரில் படத்திலும் வருகிறார்கள். நவொமிக்கு தான் படத்தில் அதிக முக்கியத்துவம். அப்பாவியான முக பாவனைகளால் மனதைக் கொள்ளை கொள்கிறார்.
படம் நெடுக மூன்று நாயகிகள் மட்டுமே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காட்சிகள் பில்டப்புக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அதை தாண்டி படத்தில் பெரிதாக சஸ்பென்ஸ் இல்லை. ஆக்ஷன் படமென்றாலே ஒரு கதைக்களம் மட்டும் தானா? லாஜிக்கே இல்லாமல் சில சண்டைக் காட்சிகள் தேவைதானா என்கிற கேள்விகள் எழாமல் இல்லை.
இவற்றையெல்லாம் தாண்டி, ஒரு மகிழ்ச்சியான ஆக்ஷன் படம் பார்க்க வேண்டுமென்றால் சார்லிஸ் ஏஞ்சல்ஸ் நிச்சயம் மகிழ்விக்கும். இந்த வாரம் விஷாலின் ரியல் ஆக்ஷனுக்கு, பதிலாக இந்த தேவதைகளின் ஆக்ஷனை ரசிக்கலாம். தமிழ் சினிமாவுக்கு இந்த வாரம் ஹாலிவுட் தேவதைகளின் தேவை தேவைப்படுகிறது.











