ஆர்யா படத்துக்குப் போன முத்தையா அதிரடியாக மாற்றிய விஷால்
விஷால் இப்போது லத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் தொடங்கியிருக்கின்றன.
இதற்கடுத்து அவர் ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.
இப்படங்களுக்கு அடுத்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருப்பதாகவும் அப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இப்போது அதில் மாற்றம் நடந்திருக்கிறதாம்.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பதிலும் விஷால் நடிப்பதிலும் மாற்றமில்லை. இயக்குநர் மட்டும் மாறிவிட்டார் என்கிறார்கள்.
விருமன் படத்தை முடித்துவிட்டு விஷால் படத்தை இயக்குவதாக இருந்த முத்தையா, அதற்கு முன்பு ஆர்யா நடிக்கவிருக்கும் படத்தை இயக்கப்போகிறார். அது உறுதியானதால் அவர் வரும்வரை காத்திருக்கவியலாது என்பதால் இயக்குநரை மாற்றிவிட்டார்களாம்.
இப்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கி முடித்துள்ள பொன்ராம் தான் விஷாலின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார்.
பொன்ராம் சொன்ன கதை கார்த்திக்சுப்புராஜ் மற்றும் விஷால் ஆகியோருக்குப் பிடித்துவிட்டதால் அவரை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.










