October 16, 2026
சினிமா செய்திகள்

மாநாடு வெளியானது – விடிய விடிய நடந்ததென்ன? விவரம்

சிம்பு நடித்துள்ள மாநாடு படம் இன்று வெளியாகிவிட்டது.

ஆனால், நேற்று மாலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் ஒரு திகில் படத்தின் திரைக்கதையை ஒத்திருந்தது என்கிறார்கள்.

இன்று படம் வெளியாகும் என்று அறிவித்து முன்பதிவு எல்லாம் நடந்தது. சென்னையில் முன்பதிவு அமோகமாக இருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை ஆறு மணியளவில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 
நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்
என்று கூறியிருந்தார்.

இதனால், திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எதனால் பட வெளீயீடு தள்ளிப்போனது? என்கிற கேள்வி எல்லா இடங்களிலும் அலை அலையாய்ப் பரவின.

ஒன்பது மணியளவில், சிக்கல்கள் தீர்ந்துவிட்டன படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. கடவுள் இருக்காரு என்று ட்வீட் போட்டார் வெங்கட்பிரபு.

இதனால், அதிகாலை ஐந்து மணிக்காட்சிக்காகத் திரையரங்குகளுக்குச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி. படம் வெளியாகவில்லை.

அதன்பின் எட்டு மணிக்கு எல்லா இடங்களிலும் படம் திரையிடப்பட்டுவிட்டது.

இரவு முழுவதும் நடந்தது என்ன?

இப்படத்தின் உரிமைக்காக வாங்கிய பணத்தை சுரேஷ்காமாட்சி திருப்பித் தராததால் தான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
அதற்குக் காரணம், தமிழக திரையரங்கு வெளீயீட்டு உரிமையைப் பெற்ற சுப்பையா பேசிய படி முழுத் தொகையையும் கொடுக்கவில்லை, படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் இணைய வெளீயீட்டு உரிமை ஆகியன விற்பனை ஆகாததுதானாம்.

சுரேஷ்காமாட்சி படம் வெளியாகாது என்று அறிவித்தவுடன், அதுவரை ஒதுங்கியிருந்த திரையுலக முக்கியஸ்தர்கள் உள்ளே வந்து பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதன்விளைவாக, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கிக் கொள்ள உத்தரவாதம் கொடுத்திருக்கிறது.

இணைய வெளியீட்டு உரிமையைப் பெறுவதாக ஒப்புக்கொண்ட சோனிலிவ் நிறுவனத்தோடு முறையாக ஒப்பந்தம் கையெழுத்து ஆகாததால்  அந்நிறுவனம் ஒப்புக்கொண்ட தொகையை உடனே கொடுக்க மதுரை அன்பு முன்வந்திருக்கிறார்.

அதன்பின்னும் சில கோடிகள் தேவைப்பட்டதாம். அதற்கு டி.ராஜேந்தரும் ஐசரிகணேசும் பொறுப்பேற்றுக் கொண்டதால் எல்லாச் சிக்கல்களும் நிறைவடைந்தன என்கிறார்கள்.

இந்தச் சிக்கலில் பேசப்படும் தொகை விவரங்கள் (உத்தேசமாக)…

படத்தின் உரிமைக்காக பதினெட்டு கோடி கொடுத்தவர் உக்கம்சந்த் என்பவர். அத்தொகை  வட்டியோடு முப்பது கோடி ஆகிவிட்டதாம்.

மதுரை அன்பு 11 கோடி, கலைஞர் தொலைக்காட்சி சுமார் எட்டுகோடி, சுப்பையா கொடுக்கவேண்டியது ஆறு கோடி போக மீதித் தொகை ஐந்துகோடிக்கு டி.ராஜேந்தரும் ஐசரிகணேஷும் பொறுப்பேற்றுக் கொண்டனராம்.

இதனால் நிதியாளர் படத்துக்கான தடையை விலக்கிக் கொண்டார், படம் வெளியாகிவிட்டது.

சொன்னபடி படம் வெளியானதால் உலகம் முழுக்க படம் திரையிடத் தயாராக இருந்த திரையரங்கு உரிமையாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

நல்லது நடந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறது படக்குழு.

Related Posts