சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் மெகா விருந்தும் எதிர்பார்ப்பும்

2022 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது பொன்னியின் செல்வன் முதல்பாகம்.

அப்படம் இதுவரை தமிழ்த்திரைப்படங்கள் தமிழ்நாடு திரையரங்குகளில் வசூலித்த தொகைகளைப் புறந்தள்ளி முதலிடம் பிடித்தது.

ஒரு படம் வசூலிக்கும் மொத்தத் தொகையில் எல்லாப் பகிர்வுகளும் போக தயாரிப்பாளருக்குக் கிடைக்கும் தொகையை வைத்தே இந்தக் கணக்கு சொல்லப்படுகிறது.

அந்த வகையில், பொன்னியின் செல்வன் முதல்பாகத்தில் சுமார் தொண்ணூற்று இரண்டு கோடி தயாரிப்பாளருக்குக் கிடைத்தது எனச் சொல்லப்படுகிறது.

2023 ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது பொன்னியின் செல்வன் 2.

இரண்டாம்பாகமும் அதே அளவு வசூலிக்கும் என எதிர்பார்த்தார்கள் ஆனால் அப்படி நடக்கவில்லை. இதுவரை அப்படம் மூலம் தயாரிப்பாளருக்கு சுமார் 55 கோடி கிடைத்திருக்கும் என்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தப் படம் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பெரிய இலாபத்தையே கொடுத்திருக்கிறது என்கிறார்கள்.

இந்நிலையில், இந்த வெற்றியைக் கொண்டாட, இன்று மதியம் ஒரு மெகா விருந்து நடத்துகிறதாம் படக்குழு.

கிண்டி குதிரைப்பந்தய வளாகத்தில் நடக்கவிருக்கும் அவ்விருந்துக்கு பொன்னியின்செல்வன் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

ஏற்கெனவே, தனது உதவியாளர்களுக்கு மட்டும் மணிரத்னம் விருந்து கொடுத்திருந்தார்.

இப்போது படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருந்து கொடுக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

முதல்பாகம் வெற்றிக்கான விருந்தின்போது பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டனவாம்.

அதனால் இம்முறையும் பரிசு இருக்குமா? அல்லது வசூல் குறைவால் விருந்து மட்டுமா? என்கிற கேள்வி எல்லோருக்குள்ளும் இருக்கிறது.

அதற்கான விடை இன்று மாலை தெரியும் என்கிறாகள்.

Related Posts