சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 – கடைசி நேர அதிரடி மாற்றம்

ராகவா லாரன்ஸ், இந்தி நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், இலட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் சந்திரமுகி 2.

பி.வாசு இயக்கியிருக்கும் இந்தப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தைக் கவனிக்க படத்தொகுப்புப் பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.

ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கிறது.

இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் கணினி வரைகலை வேலைகள் முடிவடையாததால் வெளியீடு தள்ளிப்போனதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது செப்டம்பர் 28 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதாம்.

இந்தப்படம் சுமார் இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் ஓடுகிற மாதிரி இறுதி செய்யப்பட்டிருந்ததாம். படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறதென நம்பி அவ்வளவு நேரம் வைத்திருந்திருக்கிறார்கள்.

வெளியீட்டுக்கு முன்பே அப்படத்தைப் பார்த்திருக்கிறார்கள்.அப்போது படத்தின் நீளத்தைக் குறைத்தால் இன்னும் வேகமாக இருக்கும் என்று பலரும் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

படக்குழுவினருக்கு அதில் உடன்பாடில்லை என்றபோதும் பாரத்த அனைவருமே ஒருமித்து இவ்வாறு சொன்னதால் படத்தின் நீளத்தைக் குறைக்கச் சம்மதம் சொல்லி அதற்கான வேலைகளையும் செய்துவிட்டார்கள்.

ஆம், படத்தின் நீளத்தை இருபது நிமிடங்கள் குறைத்துவிட்டார்களாம். இப்போது படம் இரண்டு மணி முப்பது நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

வெளியீட்டுக்கு முன்பே படக்குழு இந்த முடிவை எடுத்திருப்பது படத்துக்கு நல்லது என்று பலரும் சொல்கிறார்கள்.

செப்டம்பர் 28 அன்று மக்களுக்கும் முடிவு தெரிந்துவிடும்.

Related Posts