ஆர் யூ ஓகே பேபி? – திரைப்பட விமர்சனம்
குழந்தை இல்லாத தம்பதியினரான சமுத்திரக்கனி அபிராமி தம்பதியினர், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர்.தத்துக் கொடுத்த தாய் ஓராண்டுக்குப் பின் அந்தக்குழந்தை தனக்கே வேண்டும் என்று கேட்கிறார்.அச்சிக்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சி, காவல்துறை, நீதிமன்றம் எனப் பயணிக்கிறது. இறுதியில் என்னவானது? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ஆர் யூ ஓகே பேபி?
சமுத்திரக்கனி அபிராமி ஆகிய இருவரும், பல்லாண்டுகளுக்கு முன் வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் நடித்திருந்த சத்யராஜ் சுகாசினி தம்பதியரை நினைவுபடுத்துகின்றனர்.வேடத்துக்கேற்ற தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி தங்கள் வேடத்துக்கும் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கின்றனர்.
குழந்தையைப் பெற்றெடுத்த தாயாக நடித்திருக்கும் முல்லையரசி,சூழ்நிலைக்கும் பாசத்துக்கும் இடையில் சிக்கித்தவிப்போர் நிலையை தன் நடிப்பில் வெளிப்படுத்தி கவனிக்க வைக்கிறார்.
நிஜத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்,படத்தில் சொல்லாததும் உண்மை எனும் நிகழ்ச்சியை நடத்துகிறார்.அதன்மூலம் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண நினைக்கிறார். அவரே இயக்குநர் என்பது மட்டுமின்றி இதுபோன்றதொரு நிகழ்ச்சியை நடத்திப் புகழ்பெற்றவர் என்பதால் பார்ப்பது படமா? தொலைக்காட்சி நிகழ்ச்சியா? என்று சந்தேகப்பட வைத்துவிடுகிறார்.
நிகழ்ச்சி இயக்குநர் வேடமும் அதில் பாவல்நவகீதன் நடிப்பும் நன்று.இப்பாத்திரத்தைப் படைத்திருப்பதன் மூலம் பல உண்மைகளை நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
மிஷ்கின், ஆடுகளம் நரேன், அசோக், அனுபமாகுமார் ஆகியோரும் படம் எளிதாகப் பயணிக்க உதவியிருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசை கதாபாத்திரங்களின் உணர்வுகளை நமக்குக் கடத்தி வலியேற்படுத்துகிறது.
கிருஷ்ணசேகரின் ஒளிப்பதிவு சுகம்.
சி.எஸ்.பிரேம்குமாரின் படத்தொகுப்பில் தாழ்வில்லை.
குழந்தையில்லாப் பெற்றோர் மனநிலை, சந்தர்ப்பவசத்தால் குழந்தையை விற்கும் தாய் ஆகியவற்றைக் கொண்ட உணர்ச்சிகரமான கதைக்குள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பின்னணி குறித்த தகிக்க வைக்கும் உண்மையைக் கலந்து அத்தோடு குழந்தை தத்தெடுப்பு குறித்த வழிகாட்டல் மற்றும் இம்மாதிரியான சிக்கலை சட்டமும் நீதியும் எவ்வாறு அணுகவேண்டும் என்கிற பார்வை ஆகியனவற்றைச் சேர்த்து ஓர் உயரிய சிந்தனைப் படைப்பாகக் கொடுத்திருக்கிறார் லட்சுமிராமகிருஷ்ணன்.
– குமரன்











