முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் – மலையாளப் பட விமர்சனம்
வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வர நேர்மையாக உழைத்து முன்னேறவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை தவறான வழியிலும் பொருளீட்டலாம் என்று சொல்லியிருக்கும் மலையாளப் படம் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்.
இளம் வழக்கறிஞர் வினீத்சீனிவாசன் தன் தாயுடன் வசித்து வருகிறார். வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்.
அந்தநிலையில் அவரது அம்மா வீட்டில் விழுந்து காலை முறித்துக் கொள்கிறார்.அவருடைய சிகிச்சைக்குப் பணமில்லாமல் தவிக்கும் வினீத்சீனிவாசனுக்கு, இப்படிப்பட்ட பல விபத்துகளை சாலை விபத்துகளாக மாற்றி காப்பீட்டுப் பணம் பெற்றுத்தரும் ஒருவரது பழக்கம் ஏற்படுகிறது. அதனூடே அம்மாவுக்கு சிகிச்சை அளிக்கிறார்.
அதன்பின் அவரும் அதேவழியில் செல்லத் தொடங்குகிறார். ஏற்கெனவே அதைச் செய்துவரும் ஒருவர் இவர் மீது பகை கொள்கிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைப் படம் சொல்லியிருக்கிறது.
படத்தின் நாயகனாக வழக்கறிஞர் பாத்திரத்தில் நடித்திருக்கும் வினித் சீனிவாசன் அந்தப் பாத்திரத்திற்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார்.மற்றவர்களிடம் பேசுவதைவிட தனக்குத்தானே அவர் பேசிக்கொள்ளும் காட்சிகளில் அவருடைய நடிப்புத்திறன் வெளிப்படுகிறது.
அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் அர்ஷா பைஜூவின் வேடம் அவருக்கு இணையானதாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் நன்றாக நடித்து தவறை இரசிக்க வைக்கிறார்.
இன்னொரு வழக்கறிஞராக நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சரமூடு பாத்திரத்துக்கும் வினீத்சீனிவாசன் பாத்திரத்துக்கும் வேறுபாடே இல்லை. அவரும் அதற்கேற்ப நடித்திருக்கிறார். இறந்தபின்னும் வினீத்தின் நினைவுகளில் வரும் காட்சிகள் நன்று.
வினீத்தின் தோழியாக வரும் தான்விராம் நல்லவர்களின் பிரதிநிதியாக வந்து ஆறுதல் தருகிறார்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் விசுவஜித் ஒடுக்கத்தில்,படம் இயல்பாக நகர உறுதுணையாக இருக்கிறார். சிபி மேத்யூ அலெக்சின் இசை காட்சிகளுடன் இணைந்து பயணிக்கிறது.
இயக்குநர் அபிநவ்சுந்தர்நாயக், விமல் கோபாலகிருஷ்ணன் என்பவருடன் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.
முற்றிலும் தவறான கதை என்றாலும் முழுக்க நகைச்சுவை கலந்து அந்தத் தவறை வலுவிழக்கச் செய்திருக்கும் திரைக்கதையும் நன்றாக நடித்துள்ள் நடிகர்களும் படத்தை இரசிக்க வைத்திருக்கிறார்கள்.











