மோகன்லாலுக்குப் பதில் யார்? – அஜீத்தின் டேர்டெவில் பட தகவல்
இவ்வாண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு அஜீத்தின் அடுத்தபடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதுவரை ஏகே 64 என அழைக்கப்பட்டு வந்த அந்தப்படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என அறிவிக்கப்பட்டது.அப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 2 ஆம் தேதி தொடங்குமென அண்மையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அஜித் நடித்த குட்பேட்அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.2025 ஏப்ரல் 10 அன்று வெளியான
அந்தப்படம் தமிழ்நாட்டில் நல்ல வெற்றியைப் பெற்றது.
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்,அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குவார் என்று சொல்லப்பட்டுவந்தது.அவரும் அதற்கான கதை திரைக்கதை எழுதும் பணிகளில் இருப்பதாக அவ்வப்போது சொல்லிவந்தார்.ஆகஸ்ட் 3 அன்று அது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தப்படத்தைத் தயாரிக்க பல்வேறு தயாரிப்பாளர்களிடம் பேசியும் அவை எதுவும் சரியாக அமையவில்லை என்பதால் அஜித்தின் மனைவி ஷாலினியே தயாரிக்கும் முடிவை எடுத்து களமிறங்கிவிட்டார்.இந்தப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.
படத்தின் பெயர்,தயாரிப்பாளர்,இசையமைப்பாளர் ஆகியோருடைய பெயர்கள் மட்டும் ஆக்ஸ்ட் 3 அன்று அறிவிக்கப்பட்டது.அவைதவிர அந்தப்படம் குறித்த எந்தத்தகவலும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில்,அந்தப்படத்தை மிகப்பெரிய அளவில் அதாவது,பான் இந்தியா படமாக உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
அதற்கேற்ற கதையும் அமைந்திருக்கிறது என்பதால் அதைச் செயல்படுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம்.
எனவே,இந்தப்படத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் தெலுங்கு முன்னணிநடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ்,கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான கிச்சாசுதீப் ஆகியோரை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தார்களாம்.
இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதென்கிறார்கள்.
மோகன்லால் இந்தப்படத்தில் நடிப்பதற்காக சுமார் இருபது கோடி சம்பளம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.அவ்வளவு தொகை கொடுக்கவியலாது என்பது படக்குழுவின் நிலை.அதனால் அவர் படத்தில் இடம்பெறவில்லை என்று சொல்கிறார்கள்.
அதேபோல,கன்னட நடிகர் கிச்சாசுதீப் டேர்வடெவில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது.இப்போது உபேந்திராவிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாகச் சொல்கிறார்கள்.இருவரில் யாருடைய சம்பளம் கட்டுப்படியாகிறதோ அவரை நடிக்க வைத்துவிடுவார்களாம்.
மோகன்லால் இல்லையென்றான பிறகு அங்கிருந்து வேறு யாரை நடிக்க வைக்கப்போகிறார்கள்? என்கிற கேள்வி இருக்கிறதல்லவா? அதற்கான விடை கிடைத்திருக்கிறது.
மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் உன்னிமுகுந்தன்,டேர்டெவில் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.
இவர்,2024 இல் சூரி கதாநாயகனாக நடித்து வெளியான கருடன் படத்தில் முக்கியவேடத்தில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன் வைக்கிற இடத்தில் பூ வைப்பது போல மோகன்லால் இடத்தில் உன்னிமுகுந்தனை வைத்திருக்கிறார்கள்.












