விமர்சனம்

வர்மா – திரைப்பட விமர்சனம்

அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு ஒரிஜினலின் ரீமேக். விக்ரம் மகன் துருவ் அறிமுகம், பாலா இயக்கம் என்றெல்லாம் எதிர்பார்ப்புடன் இருந்து ட்ரெய்லர் ரிலீசிலே கொஞ்சம் ஏமாற்றம் தந்தது. படம் வரவேயில்லை. இந்திய சினிமா சரித்திரத்தில் படம் நன்றாக இல்லையென்று தயாரிப்பாளரே சொல்லி ரிலீசாகாமல் செய்ததெல்லாம் வரலாறு.

பின்பு ஒரிஜினலில் இணை இயக்குநராய் பணி புரிந்த ஒருவரால் ஆதித்ய வர்மாவாக வந்தது. ரீ மேக் என்றால் ஈயடிச்சான் காப்பியாகத்தான் இருக்க வேண்டுமென்று எவர் சொன்னதோ. ரவி.கே.சந்திரன் திறமைசாலி ஒளிப்பதிவாளருக்கே சுதந்திரம் தராமல் ஃப்ரேம் பை ஃப்ரேம் கேமரா ஆங்கிளிலிருந்து இசை ,நடிப்பு, வசனம் என்று டிட்டோவாக்கி அர்ஜுன் ரெட்டியே பெஸ்ட்டுப்பா சொல்ல வைத்தார்கள்.

வர்மாவில் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் இருக்கிறார். இசையமைப்பாளர் ரதன் இருக்கிறார். இயக்குநர் பாலா வசனத்திலும் சிற்சில காட்சி அமைப்பிலும் இருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் ஒரு படத்தை( 2:50 தமிழ் தெலுங்கு இரண்டிலும்) 1: 50 நிமிடங்களில் முடித்திருக்கிறார். ஒரிஜினல் தெலுங்கு என்பதால் அதில் இருக்கும் மிகையை தமிழில் குறைத்து ட்ரிம்மாக்கியிருக்கிறார் பாலா.

அர்ஜுன் ரெட்டியிலும் ஆதித்ய வர்மாவிலும் இருந்த பாட்டி கேரக்டரைத் தூக்கியதில்லாமல் வேலைக்காரி ஈஸ்வரி ராவ் கதாபாத்திரத்தை வலுவாக்கியிருக்கிறார். இதுவே நன்றாக இருக்கிறது. க்ளைமாக்ஸ் இறுக்கத்துக்கு அதுவே பேருதவியாயிருக்கிறது.

லிங்க வழிபாடு போன்றவற்றில் பாலா டச் தெரிந்தாலும் டெலிவரி சீன் ஜீரணிக்க முடியவில்லை. அது சாத்தியமா என்பது ஒருபக்கமிருக்க பாலா வக்கிரகுணம் கொண்டவர் என்ற சிலரின் பேச்சுக்கு கட்டியம் கூறும் காட்சியது. ‘இதுதான் உங்க ஃபேமிலி சாங்கா’, ‘அமேசான்ல சென்சார் கட் இல்லாம காட்டுறாங்களாம்’, ‘நல்ல நாள் பார்த்து ஆபரேஷன் பண்ணினா காலோட சேர்த்து சா….யும் ஆபரேஷன் செய்ய வேண்டியதுதான்’ போன்ற வசனங்களில் (வசனம் – ராஜுமுருகன்)பாலா.

ஆனாலும் ஆச்சரியம் ஆதித்ய வர்மாவில் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் அசால்ட் காட்டிய துருவ் அதில் பாதியைக் கூட இதில் வெளிப்படுத்தாதது. துருவ்வுக்கு ஒட்டாத ஹீரோயின் மேகா என்று ஏமாற்றம் நிறைய. ரைசா போர்ஷனும் நிறைவில்லை. அவசரமாக இன்னொரு பெண்ணை கையாளும் ஹீரோ கதாபாத்திரம் தன்னிடம் காசுக்கு வரும் பெண்களிடம் கதை மட்டும் சொல்லி அனுப்புவது என்று குழப்படிகளும் அதிகம்.

பாலா இந்தப் படத்தை இயக்காமலே இருந்திருக்கலாம்.
.
– கணேசகுமாரன்

Related Posts