80ஸ் பில்டப் – திரைப்பட விமர்சனம்
பெயரிலேயே 80 ஸ் பில்டப் என்று போட்டது சும்மா இல்லை.படத்தின் கதை எண்பதுகளில் நடக்கிறது. முந்தைய காலகட்டங்களைத் திரைப்படங்கள் மூலம் அடையாளப்படுத்துவது எளிது என்பதால் நாயகன் சந்தானத்தைக் கமல் இரசிகராக்கியிருக்கிறார் இயக்குநர். கவனியுங்கள் அப்போதெல்லாம் கமல்தான் முதல் அப்புறம்தான் ரஜினி.
அந்தக்காலத்துக்கேற்ப புதையல், வைரம், ஜமீன்தார் ஆகியனவும் இடம்பெற்றிருக்கின்றன.
சந்தானத்தின் தாத்தா வைரத்தை விழுங்கி இறக்கிறார்.சாவு வீட்டில் அந்த வைரத்தைக் கைப்பற்ற ஒரு கூட்டம், அதற்கிடையே சந்தானத்தின் காதல்,அவருடைய அப்பா ஆடுகளம் நரேனின் பொருந்தாக்காதல் என சிரிக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டு படம் எடுத்திருக்கிறார்கள்.
கமல் இரசிகர் காதலில் விழுகிறார் என்றால் என்னென்னவெல்லாம் எதிர்பார்க்கலாமோ அத்தனையையும் தன் நகைச்சுவை சிறப்புப்பொடியையும் கலந்து கொடுத்திருக்கிறார் சந்தானம்.அவருடைய துள்ளுந்துக்கு எம்.ஜி.ஆர் பயன்படுத்திய மகிழுந்து எண் கொடுத்தது எதேச்சையாக நடந்ததா?
நாயகி ராதிகாப்ரீத்தி புதுமுகம். பாவாடை தாவணியில் நகரத்துப்பெண். கொஞ்சம் கொஞ்சமாகக் காதலில் விழுந்து இளைஞர்களைக் கவர்கிறார்.
தங்கையாக வரும் சங்கீதாவுக்கு முக்கியவேடம்.தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளுகிறார்.
ஆர்.சுந்தரராஜன்,ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான்,தங்கதுரை, கே.எஸ்.இரவிகுமார்,முனீஸ்காந்த், கிங்ஸ்லி, மொட்டை இராசேந்திரன்,மயில்சாமி,சேசு, சூப்பர்குட்சுப்பிரமணி என ஏராளமானோரை நடிக்க வைத்து சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள்.
இவர்களில் ஆடுகளம் நரேன் ஆனந்தராஜி (எழுத்துப்பிழை அல்ல) வரும் காட்சிகள் அபத்தமெனினும் சிரிப்பு.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணிச் சத்தம் அதிகம்.
ஒளிப்பதிவாளர் ஜேக்கப்ரத்தினராஜ் ஒவ்வொரு காட்சிக்கும் கஷ்டப்பட்டிருக்கிறார்.
சிரிக்க வைப்பதொன்றையே இலட்சியமாகக் கொண்ட இயக்குநர் கல்யாண், அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத்தயாராகி பிணத்தின் வயிற்றில் வைரம், எமன் வருகை, துக்கவீட்டில் காதல் என்று புகுந்து விளையாடியிருக்கிறார்.
பில்டப் சில இடங்களில் மட்டும்.
– இளையவன்











