விமர்சனம்

பொய்க்கால் குதிரை – திரைப்பட விமர்சனம்

பிரபுதேவா மனைவியை இழந்துவிட்டு மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு விபத்தில் ஒரு காலை இழந்துவிட்ட அவருக்கு ஆறுதல் அவருடைய மகள் மட்டுமே. அந்த மகளுக்கு ஒரு வித்தியாசமான நோய். அதைச் சரிசெய்யப் பெரும் தொகை தேவைப்படுகிறது. 

அதற்காக பெரும் ஆபத்து எதிர்நோக்கியிருக்கும் வேலையைச் செய்து பணம் திரட்டி மகளைக் காப்பாற்ற நினைக்கிறார். 

அவர் நினைத்தபடி நடந்ததா? இல்லையா? என்பதைச் சொல்லும் படம் பொய்க்கால் குதிரை.

நடனப்புயல் எனப்பெயர் பெற்றவருக்கு ஒரு கால் இல்லை என்று கதை எழுதியிருப்பதே ஆச்சரியம். அந்த ஒரு காலிலும் சிங்கிள் என்கிற பாடலுக்கு அவர் ஆடியிருக்கும் நடனம் அட்டகாசம். 

கால் இல்லாதவர் போல் நடப்பது, சண்டை செய்வது ஆகிய காட்சிகளில் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் பிரபுதேவா. 

ரைசாவில்சனின் பாத்திரமும் அவர் நடிப்பும் நன்று.

வரலட்சுமி சரத்குமாரின் ஆளுமை படத்துக்குப் பலம் சேர்க்கிறது.முந்தைய படங்களைக் காட்டிலும் நிதானமாகப் பேசுகிறார். 

வரலட்சுமியின் கணவராக வரும் ஜான்கொக்கேன் வேடம் எதிர்பார்க்கக் கூடியதுதான் என்றாலும் அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.

நாயகனின் நண்பராக வரும் ஜெகனுக்கு இப்படத்தில் கொஞ்சம் பதவி உயர்வு.வில்லத்தனமெல்லாம் செய்து வியப்படைய வைக்கிறார்.

ஒருசில காட்சிகளில் வரும் ஷாம் படத்தின் இரண்டாம்பாகத்துக்கு வித்திட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பள்ளு, நாயகனின் பாத்திரத்திற்கேற்ப ஒளியமைப்புச் செய்து காட்சிகளைப் படமாக்கியிருக்கியிருப்பது நன்று.

இமானின் இசையில் பாடல்கள் கேட்க வைக்கின்றன, பின்னணி இசையிலும் கவனம் ஈர்க்கிறார்.

வசனகர்த்தா மகேஷ்,பெரிய பெரிய தத்துவங்கள் என்று சொல்லப்படுபவற்றை போகிற போக்கில் வசனங்கள் ஆக்கியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் பி.ஜெயக்குமார்,திரைக்கதையில் திருப்பங்களுக்கு மேல் திருப்பங்களை வைத்து விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்.இறுதியில் பிரபுதேவா நடந்தவற்றை விவரிக்கும் காட்சி சபாஷ் போட வைக்கிறது.

நடனப்புயல் பிரபுதேவாவின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கும் படம்.

Related Posts