காட்டேரி – திரைப்பட விமர்சனம்
வைபவ் அவர் மனைவி சோனம்பாஜ்வா, கருணாகரன்,ரவிமரியா,ஆத்மிகா உள்ளிட்டோர், தங்கப்புதையலைத் தேடி சென்னையிலிருந்து கிராமமொன்றுக்குச் செல்கின்றனர். அந்தக் கிராமத்தில் அவர்கள் சந்திக்கும் அனைவருமே பேய்கள்.
அது தெரிந்ததும் அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். அவர்கள் தப்பினார்களா? இல்லையா? என்பதைப் பயத்துடன் சொல்ல முயன்றிருக்கும் படம்தான் காட்டேரி.
வைபவ் வழக்கம்போல் அசட்டுத்தனமான நடிப்பினால் கவர்கிறார்.அவர் பயப்படும் காட்சிகளில் நமக்கு சிரிப்பு வருகிறது.
சோனம் பாஜ்வா, ஆத்மிகா ஆகிய இருவரும் பேய்களைப் பார்த்து ஆளுக்குக் கொஞ்சநேரம் பயப்பட்டு நம்மையும் பயமுறுத்த முயல்கிறார்கள்.
கருணாகரன், ரவிமரியா ஆகியோரை வைத்து எல்லோரையும் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். அவர்களும் அதற்காகப் பாடுபட்டிருக்கிறார்கள்.
மாத்தம்மா எனும் பாத்திரத்தில் வருகிற வரலட்சுமிசரத்குமார், நான் அழகா இருக்கேனா? எனக் கேட்கும்போதே பயப்பட வைக்கிறார்.
காவல்துறை ஆய்வாளராக வருகிற ஜான்விஜய், தன் வழக்கமான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்புகளைத் தவறாமல் செய்திருக்கிறார்.
பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகும் அங்கு ஆபத்துகளும் ஒருங்கே படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன.
பேய்ப்படங்களுக்குப் பின்னணி இசை மிகவும் முக்கியம். அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.என்.பிரசாத்.
பேய்க்கதைப் படங்களில் ப்ளாஷ்பேக் எனப்படும் சொல்லும்கதையில் மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள்.அவர்கள் ஏதோவொரு காரணத்தினால் இறந்துபோய் நடப்புக் கதையில் பேயாக வருவார்கள்.
இந்தப்படத்தில், சொல்லப்படுகிற முன்கதையில் கிணறுவெட்டப்போய் அதில் காட்டேரி வந்து மூட்டை மூட்டையாகத் தங்கக்கட்டிகள் மற்றும் நகைகள் கொடுக்கிறது என்று எழுதியிருக்கிறார் இயக்குநர் டீகே.
பேய்க்கதைகளில் லாஜிக் பார்க்கவேண்டியதில்லை என்கிற சுதந்திரத்தை வைத்துக் கொண்டு இஷ்டத்துக்கு விளையாடியிருக்கிறார்கள்.
பேய்ப்படங்களை இரசிப்பவர்களுக்குப் பிடிக்கும்.











