எண்ணித்துணிக – திரைப்பட விமர்சனம்

ஜெய்யும் அதுல்யாவும் காதலர்கள். திருமணம் செய்ய இருவீட்டாரின் சம்மதமும் கிடைக்கிறது. திருமணத்துக்காக நகை வாங்கப் போகுமிடத்தில் அந்த நகைக்கடையைக் கொள்ளையடிக்க ஒரு கூட்டம் வருகிறது. அந்தக்கூட்டத்தால் துப்பாக்கியால் சுடப்படுகிறார் அதுல்யா.
அவர் என்னாவாகிறார்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச்சொல்லியிருக்கும் படம்தான் எண்ணித்துணிக.
மென்பொருள் துறையில் பணியாற்றும் ஒரு சாதாரண இளைஞராக வரும் ஜெய், காதலியின் அப்பாவிடம் திருமணத்துக்குச் சம்மதம் வாங்குமிடத்திலேயே வித்தியாசம் காட்டுகிறார்.சண்டைக்காட்சிகளில் ஆக்ரோசம் காட்டுகிறார்.
அதுல்யா அழகாக இருக்கிறார். அவரை இன்னும் கொஞ்சம் அதிகமாகக் காட்டியிருக்கலாம் எனச் சொல்லத்தோன்றுகிறது.
இன்னொரு நாயகி போல் அஞ்சலிநாயர் வருகிறார், அதிகமாக அழுதுகொண்டே இருக்கும் காட்சிகள் அவருக்கு. அதை அளவாகச் செய்து காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறார்.
வித்யாபிரதீப்புக்கு வித்தியாசமான வேடம். இழக்கக் கூடாததை இழந்துவிட்டு இப்படி இருந்தேன் எனக் குமுறும்போது தன்னை வெளிப்படுத்துகிறார்.
அமைச்சராக வருகிறார் சுனில்ஷெட்டி, வழக்கமாக திரைப்படங்களில் பார்க்கும் அமைச்சர் போல் இல்லாமல் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது அவருடைய வேடம். அதில் நன்றாக நடித்து இரசிக்க வைத்திருக்கிறார்.
சர்வதேச கொள்ளைக்கும்பல் தலைவராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ்சுப்பிரமணியன் அதற்கேற்ப நடித்திருக்கிறார்.
சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் குறைவில்லை.
ஜே.பி. தினேஷ் குமார் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
அமைச்சர் உள்ளிட்ட அதிகாரவர்க்கம் மற்றும் சர்வதேச கொள்ளைக் கும்பல்களின் தன்னலத்தால், நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் சாமானியர்களின் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் திடீர் திருப்பங்கள் அதனால் ஏற்படும் மாற்றங்கள் ஆகியனவற்றைப் பதிவு செய்துள்ளார் இயக்குநர் எஸ்.கே.வெற்றிச்செல்வன்.