விமர்சனம்

கூர்கா – திரைப்பட விமர்சனம்

வட இந்தியாவிலிருந்து இந்தியா முழுக்கப் பரவி வாழும் கூர்கா இனம் பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறது படம். அவ்வாறு தமிழகம் வந்த கூர்கா ஒருவர் தமிழ்ப்பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிய அவர்களின் வாரிசாக வருகிறார் யோகிபாபு.

அவருக்குக் காவல்துறையில் சேர ஆசை. ஆனால் அது நடக்காமல் ஒரு பெரிய வணிக வளாகத்தின் காவலாளிகளில் ஒருவராக இருக்கிறார்.

அந்த வளாகம் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்படுகிறது. காவல்துறை உயரதிகாகள் குடும்பம் உட்பட ஏராளமானோர் பிணைக்கைதிகளாக இருக்கிறார்கள்.

அவர்களை மீட்க இந்த கூர்கா யோகிபாபு கூட ஒரு நாயை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்? என்பதுதான் படம்.

காவல்துறை பயிற்சி வகுப்பில் சொதப்புவது தொடங்கி கடைசிவரை நிறைந்திருக்கிறார் யோகிபாபு. பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் சோதிக்கிறார்.

இவர் கதாநாயகன் என்றதும் நேரெதிராக ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியை நாயகியாக்கியிருக்கிறார்கள். அவரும் அமெரிக்க ஆங்கிலம் பேசி கவர்கிறார. காதல் பாடல் வைக்கவில்லை.

அதேபோல கடைசிக் காட்சியில் வில்லனோடு சண்டை செய்ய வாய்ப்பிருந்தும் அங்கும் அடி வாங்குவது போல் நடித்திருக்கிறார் யோகிபாபு.

சார்லி முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். அவரை வைத்துக் கொண்டு, எச்சை எச்சை என்று தொடங்கி எச்.ராஜாவை அடித்துத் துவைத்துத் தொங்கப்போடுகிறார்கள். மக்கள் ரசித்துச் சிரிக்கிறார்கள். அந்த வேடத்தில் நடித்திருக்கும் மயில்சாமியும் மிகப்பொருத்தமாக இருக்கிறார்.

நமோநாராயணன் நித்யானந்தாவைப் போல் நடித்திருக்கிறார். அதுவும் மக்களை ஈர்க்கிறது.

சன் தொலைக்காட்சி அதிபரைக் கிண்டல் செய்யும் விதமாக டிஎம்.கார்த்திக் நடித்திருக்கிறார்.

அமெரிக்கத் தூதராக நடித்திருக்கும் நாயகி எலிசா நல்ல தேர்வு.

ரவிமரியா படத்தில் ஆடுகளம் நரேனை சோதிப்பது போலவே நிஜத்தில் நம்மையும் சோதிக்கிறார். ஆனாலும் மகனைக் காப்பாற்றுங்கள் என்று கதறி அழும்போது கலங்கவைக்கிறார்.

மனோபாலா,ஆனந்தராஜ் ஆகியோரும் படத்துக்கு உதவியிருக்கிறார்கள்.

ராஜ்பரத், ஜேபிஜெய் ஆகியோர் வில்லன்கள். இவர்களில் ராஜ்பரத் வில்லத்தனத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஜேபி.ஜெய் முக்கியமான நேரத்தில் மனம்மாறி முன்னாள் இராணுவத்தினரைப் பெருமைப் படுத்துகிறார்.

கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு நன்று. ராஜ் ஆர்யனின் பின்னணி இசை இசைவாக இருக்கிறது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை விமர்சிக்கும் விதமான காட்சிகள், முதல்வர் துணைமுதல்வர் உட்பட அரசியல்தலைவர்களை விமர்சிக்கும் காட்சிகள் ஆகியன நல்ல சூடு.

கடத்தப்பட்டவர்களின் நிலையை தொலைக்காட்சி நேரலையில் பார்க்கும் மக்கள் தங்கள் பங்காகப் பணம் செலுத்தும் காட்சிகள் இன்னும் செத்துப்போகாத மனிதநேயத்தை வெளிப்படுத்தும் காட்சிகள்.

யோகிபாபுவை எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்று புரிந்து படமெடுத்ததால் இயக்குநர் சாம் ஆண்டன் வெற்றி பெற்றிருக்கிறார்.

Related Posts