காந்தாரா – திரைப்பட விமர்சனம்
மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின் வாரிசுகள் திரும்பப் பெற முனைய அதற்கு எதிராக அம்மக்கள் போராடுகிறார்கள்.அதேநேரம் அம்மக்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறையும் களமிறங்குகிறது. முடிவில் என்னவானது? என்பதை கர்நாடக எல்லையோரத்தில் வனப்பகுதி கிராமமொன்றில் நடக்கும் சிறுதெய்வ வழிபாட்டை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கும் படம் காந்தாரா.
எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
தொடக்கத்தில், மதுக்குடித்துக் கொண்டும் எருமைப்போட்டி போன்ற வீரவிளையாட்டுகளில் கலந்துகொண்டும் வனத்தில் பன்றிகளை வேட்டையாடிக்கொண்டும் நண்பர்களோடு சுற்றித் திரிகிறார். நிலத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில் விஸ்வரூபமெடுத்து மிரளவைத்திருக்கிறார்.சாமி அவர் மேல் ஏறியதும் ஓவ் ஓவ் என ஓங்காரமிட்டுக் கொண்டே அவர் ஆடும் சன்னதம் அபாரம்.
நாயகியாக சப்தமி கவுடா நடித்திருக்கிறார். ஒருபக்கம் தன் வீடு உள்ளிட்ட நிலத்தைப் பறிக்கும் வனத்துறை, இன்னொரு பக்கம் நீண்டகாலக் கனவான அதே வனத்துறை வேலை ஆகிய இரண்டுக்குமிடையிலான போராட்டத்தைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.நாயகன் ரிஷப்ஷெட்டி அவரைச் சீண்டும் காட்சிகள் சுவாரசியம்.
வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் கிஷோர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவருக்குச் சிறப்பான வேடம். அதை மேலும் சிறப்பாக்கியிருக்கிறது அவருடைய நடிப்பு.
மன்னரின் வாரிசாக நடித்திருக்கும் அச்யுத்குமார் அமைதியாக நடித்து அசத்தியிருக்கிறார். ஆஜானுபாகுவும் ஆக்ரோசமும் மட்டுமன்று அமைதியும் ஆபத்துதான் என்பதை நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பி.அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை அதிலும் குறிப்பாக தெய்வ வழிபாட்டுக் காட்சிகளில் பின்னணி இசை களத்துக்கேற்ப அமைந்திருக்கிறது.
அரவிந்த் எஸ்.காஷ்யப் ஒளிப்பதிவில் கர்நாடக எல்லையோர கிராம அழகுகளை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.தெய்வ வழிபாட்டுக் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன.
கே.எம்.பிரகாஷ், பிரதீக் ஷெட்டி ஆகியோரின் படத்தொகுப்பில் படம் தொய்வின்றிச் செல்கிறது.
சிறுதெய்வ வழிபாடுகளில் தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதைத் திரைக்கதையில் வெளிப்படுத்தியிருக்கிறார் ரிஷப்ஷெட்டி.
சிறுதெய்வங்கள் துளு மொழியில் பேசுகின்றன என்பது முக்கியமாகக் கவனிக்கவேண்டிய செய்தி.
இறுதியில் அரசாங்கத்தின் வனத்துறை இயற்கையைப் பாதுகாக்கும் என்று சொல்லியிருப்பது முரண்.
காந்தாரா போற்றுதும்.