கொரில்லா – திரைப்பட விமர்சனம்
காலையில் மாநகரப் பேருந்துகளில் திருட்டு, பகலில் மருந்துக்கடையில் வேலை, மாலையில் மருத்துவர் தொழில் என்று இருக்கும் நாயகன் ஜீவா,
ஆட்குறைப்பு காரணமாக வேலை இழந்த சதீஷ், திரைப்பட நடிகர் ஆசையில் இருக்கும் விவேக் பிரசன்னா, வறுமையில் தற்கொலை முடிவுக்குச் சென்று திரும்பிய விவசாயி மதன்குமார் ஆகியோரோடு நாயகன் ஜீவாவின் குழந்தை போல இருக்கும் காங் என்று அழைக்கப்படுகிற சிம்பன்சி
இவர்கள் ஐவரும் சேர்ந்து, பெரிய அளவில் பணம் வேண்டி ஒரு வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுச் செல்கிறார்கள். போன இடத்தில் என்னவெல்லாம் நடந்தது? என்பதை முழுநீள நகைச்சுவையில் சொல்ல வந்திருக்கிறார்கள்.
ஜீவா கொடுத்த வேடத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் கைகளை உயர்த்தும்போது கூடுதல் உற்சாகத்துடன் இருக்கிறார்.
சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோர் சிரிப்பு மூட்டுகிறார்கள். யோகிபாபு வந்தவுடன் அது இன்னும் அதிகமாகிறது. பிரியாணிக் காட்சி வயிறு வலிக்க வைக்கிறது.
ஷாலினிபாண்டே நாயகியாக நடித்திருக்கிறார். அவருக்குப் பெரிதாக வேலையில்லை.
ஜீவாவுடன் நடித்திருக்கும் சிம்பன்சி, ஒரு உதவியாளர் போலவே எல்லா வேலைகளையும் செய்கிறது. அது பாசத்தோடு ஜீவாவை அணைத்துக் கொள்வதும் வங்கியில் யோகிபாபுவுடன் ஒட்டிக் கொள்வதும் ரசிக்கத்தக்க காட்சிகள்.
ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு பொருத்தமாக இருக்கிறது. சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
ஏனோதானோவென்று போய்க் கொண்டிருக்கும் படம் வங்கிக்குள் நுழைந்தவுடன் வேகம் பிடிக்கிறது.
எவ்வித நம்பகத்தன்மையுமில்லாத வங்கிக் கொள்ளைக் காட்சிகள், விவசாயக் கடன் தள்ளுபடி என்கிற கோரிக்கை வந்ததும் வேறு வடிவம் எடுக்கிறது.
அதோடு, இந்தித் திணிப்பு உள்ளிட்ட சமகால அரசியல் விமர்சனங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. தெர்மாக்கோல் இன்னும் சிரிக்கவைக்கிறது.
உயிர்களிலும் பெரிய உயிர் சின்ன உயிர் என்கிற வேறுபாடு இருப்பதைப் போட்டிலடித்தாற் போல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் டான் சாண்டி.
மிகப்பெரிய விசயத்தை நகைச்சுவை கலந்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்த இயக்குநரின் எண்ணம் போற்றுதலுக்குரியது.
ஜீவாவின் மதிப்பை உயர்த்துகிற படமாக இது இருக்கும்.











