விமர்சனம்

வெண்ணிலா கபடிக் குழு 2 – விமர்சனம்

தன் மகன் மருத்துவராக வேண்டும் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிற அப்பாக்களுக்கு மத்தியில், தன் மகன் கபடி விளையாட்டு வீரனாகவேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஒரு அப்பா.

ஆனால் அவருடைய ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான் படம்.

1989 இல் நடக்கும் கதை என்பதால், விக்ராந்த் பாடல் பதிவகம் நடத்திக் கொண்டிருக்கிறார். (இளையராஜா வழக்கு போடுவாரோ என நினைத்து பாடங்களைப் பயன்படுத்தவில்லை.)

பொறுப்புடன் வேலை செய்து கொண்டிருக்கும் விக்ராந்த், நாயகி அர்த்தனாபினுவைக் கண்டவுடன் காதல் கொள்கிறார்.

இவர் ஒரு பக்கம் காதலித்துக் கொண்டிருக்க இவருடைய அப்பா பசுபதி, வேலையை இழந்தும் அடங்காமல் தேடித் தேடி கபடி போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பொறுப்பற்ற மகன் பொறுப்பான அப்பா என்பதை அப்படியே தலைகீழாகத் திருப்பிப் போட்டிருக்கிறார் இயக்குநர் செல்வசேகரன்.

விக்ராந்தும் பசுபதியும் போட்டி போட்டு நடித்து படத்தைக் காப்பாற்றுகிறார்கள்.

கபடி வீரராகவும் பாசமிகு தந்தையாகவும் எல்லோருக்கும் உதவும் பெருமனம் படைத்தவராகவும் இருக்கிறார் பசுபதி. தம் நடிப்புத் திறமையால் அந்தப் பாத்திரத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

அவருக்கு ஈடுகொடுத்திருக்கிறார் விக்ராந்த். காதல் மோதல் கபடி ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கிறார்.

நாயகி அர்த்தனாபினு அழகாக இருக்கிறார். பாடல்களுக்குப் பயன்படுகிறார்.

சூரிக்கு வாழ்க்கை கொடுத்தது இப்படத்தின் முதல்பாகம். இந்தப்படத்தில் அவர் பரோட்டா கடையே நடத்துகிறார். அந்தக்கடையின் முதலாளி தொழிலாளி மட்டுமல்ல கடையின் ஒரே வாடிக்கையாளரும் அவர்தான் என்பது சுவாரசியம்.

கபடி பயிற்சியாளர் கிஷோர், பசுபதியின் நண்பராக வரும் திலீபன்.அப்புக்குட்டி, ரவிமரியா ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு படத்தை இலகுவாக்கியிருக்கிறது.

செல்வகணேஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் ஈர்க்கிறார்.

தமிழன் என்கிற ஒரு தகுதி போதாதா? கபடி விளையாட? என்பது உட்பட கூர்மையான பல வசனங்களை எழுதியதோடு திரைக்கதையில் செய்திருக்கும் மாற்றங்களும் செய்திருக்கிறார் செல்வசேகரன்.

யாரும் எதிர்பாராத கடைசிக்காட்சி கலங்க வைக்கிறது.

இரண்டாம் பாகமும் வெற்றிப் புள்ளிகளைப் பெற்றிருக்கிறது.

Related Posts