திருவின்குரல் – திரைப்பட விமர்சனம்
நடிப்பு என்பது வசனம் பேசுவது என்கிற எண்ணம் நிரம்பியுள்ள திரையுலகில் ஒரு நடிகரின் உண்மையான நடிப்புத் திறமையை அறிய அவருக்கு வாய்பேச முடியாத வேடம் கொடுக்கவேண்டும் என்பார்கள். இந்தப்படத்தில் வாய்பேசமுடியாத காது கேளாத வேடம் அருள்நிதிக்கு.அதைச் சிறப்பாகச் செய்து தன் நடிப்பாற்றலைக் காட்டியுள்ளார் அருள்நிதி.
கட்டிடப்பொறியாளரான அருள்நிதி அப்பா பாரதிராஜாவுடன் வாழ்ந்துவருகிறார். அப்பாவுக்கு உடல்நலமில்லை என்பதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அங்கு போனால் வேறொரு பெரிய சிக்கல் உருவாகிறது. அதனால் அருள்நிதி குடும்பத்துக்கே ஆபத்து எனும் நிலை.
அந்த ஆபத்திலிருந்து குடும்பத்தை அருள்நிதி எப்படி காப்பாற்றுகிறார்? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கும் படம்தான் திருவின்குரல்.
அமைதி, அச்சம், ஆவேசம் ஆகியனவற்றை முகபாவங்களில் வெளிப்படுத்தி நடிப்பில் தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார் அருள்நிதி.
பாரதிராஜாவின் அனுபவ நடிப்பு படத்துக்கு வலுச்சேர்க்கிறது.
நாயகி ஆத்மிகாவும் பொருத்தமாக நடித்திருக்கிறார்.பாடலுக்கு மட்டும் வருகிற நாயகியாக இல்லாமல் கதையில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அதற்கேற்ப நடித்திருக்கிறார்.
வில்லன்களாக நடித்திருக்கும் அஷ்ரப், சுரேஷ், சாந்தன், வினோத் ஆகியோர் கொடுமையான வேடத்தைக் கொடூரமாகச் செய்திருக்கிறார்கள்.
சிண்ட்டோ நாயகனின் பாத்திரத்தன்மையை உணர்ந்து காட்சிகளை அமைத்திருக்கிறார். அது படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.
சாம்.சிஎஸ்ஸின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையின் மூலம் காட்சிகளுக்கு உயிர் ஊட்டியிருக்கிறார்.
ஹரீஷ்பிரபு எழுதி இயக்கியிருக்கிறார். வழக்கமான நாயகன் என்றில்லாமல் சவாலான ஒரு பாத்திரத்தை உருவாக்கி அதனடிப்படையில் கதை எழுதியதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.திரைக்கதையில் இருக்கும் சில தொய்வுகளைக் களைந்திருந்தால் திருவின்குரல் இன்னும் ஓங்கி ஒலித்திருக்கும்.
– சுமன்











