October 18, 2026
விமர்சனம்

கார்கி -திரைப்பட விமர்சனம்

ஒரு சாதாரண நடுத்தர வர்க்கப் பெண்மணி, அரசதிகாரம், அரக்கர்களெனத் தோரும் ஊடகத்துறை, திடீரென முளைத்த கொலைவெறி கொண்ட எதிரிகள் மற்றும் உறவுகள் ஆகியனவற்றுக்கெதிராகப் போராடுவதை மிக மிக எதார்த்தமாகச் சொல்லியிருக்கும் படம்தான் கார்கி.

பள்ளி ஆசிரியையான சாய்பல்லவிக்கு திருமணம் நிச்சயமாகிறது. திருமணக் கனவுகளுடன் இருக்கும் அவர் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும்  எதிர்பாராத நிகழ்வு மொத்த வாழ்வையும் புரட்டிப் போடுகிறது.

ஓர் அடுக்குமாடிக்குடியிருப்பில் ஒன்பது வய்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சாய்பல்லவியின் அறுபது வயது தந்தையும் சேர்க்கப்படுகிறார்.அதனால்,நிச்சயமான திருமணம் நின்று போகிறது, காவல்துறை மிரட்டுகிறது, நீதித்துறை கைவிரிக்கிறது. இவற்றை சாய்பல்லவி எப்படி எதிர்கொள்கிறார்? என்பதையும் கடைசியில் என்ன நடக்கிறது? என்பதையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது படம்.

நினைத்துக் கூடப்பார்க்க முடியாத பெரிய பெரிய சிக்கல்களைச் சின்னச் சின்ன முகபாவனைகள் மூலம் வெளிப்படுத்தி நம்மைக் கலங்க வைத்திருக்கிறார் சாய்பல்லவி.

தமிழ்த்திரைப்பட இயக்குநர்களே, விஜய் அஜீத் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுக்கு இணையான ஒரு நாயகியாக சாய்பல்லவி விஸ்வரூபமெடுத்து நிற்கிறார் பாருங்கள். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அவருக்குத் துணையாக வருகிற காளிவெங்கட், திக்கித் திக்கிப் பேசி எதிரிகளைத் திணறடித்து கைதட்டல் பெற்றுக் கொண்டேயிருக்கிறார். இழப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லையே சார் என ஜெயப்பிரகாஷிடம் சொல்லும் காட்சி மாஸ்டபீஸ்.காளிவெங்கட்டின் திரைப்பயணத்தில் இது முக்கியமான முதன்மையான படமாக இருக்கும்.

சாய்பல்லவியின் அப்பாவாக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சிவாஜி, வழக்குரைஞராக வருகிற ஜெயப்பிரகாஷ்,கவிதாலயா கிருஷ்ணன், நீதிபதியாக நடித்திருக்கும் திருநங்கை சுதா, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையாக வரும் சரவணன் உள்ளிட்டோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சிரயந்தி, பிரேமகிருஷ்ணா அகடு ஆகியோரின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்திக் காட்டுகின்றது.

கோவிந்த்வசந்தாவின் இசை பிரமிக்கவைக்கிறது. காட்சியின் அதிர்வுகளை நம் உடலில் உணரவைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் கவுதம் ராமச்சந்திரன். குழந்தைகள் பாதுகாப்பு, ஆதிக்க எதிர்ப்பு,தப்பும் தவறுமான பொதுப்புத்தி,சாமான்ய மக்களின் வாழ்க்கை, காவல்துறை ஒரு வழக்கை அணுகும் முறை, ஒரு சில மூத்த வழக்குரைஞர்களின் ஆணவப்போக்கு உள்ளிட்ட பல அடுக்குகளைக் கொண்ட திரைக்கதை அமைத்திருக்கிறார்.
கடைசியில் கதையில் நடக்கும் திருப்பம், குற்றம் குற்றமே என்கிற உயரிய கருத்தை வலியுறுத்தினாலும் அதுவரை படம் சொல்லிவந்த எல்லா நல்லுணர்வுகளுக்கும் எதிராக அமைந்துவிட்டதுதான் சோகம்.

கார்கி – ஓர் அழகிய காணொலிக் கவிதை.

Related Posts