ரெட்ட தல – திரைப்பட விமர்சனம்
படத்தின் பெயருக்கேற்ப அருண்விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.ஒருவர் வறுமையில் வாழ்பவர்.இன்னொருவர் பெரும் பணக்காரர்.வறுமையில் வாழும் அருண்விஜய் பணக்காரரை கொன்றுவிட்டு அந்த இடத்துக்குப் போகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்புடன் சொல்ல முயன்றிருக்கிறது படம்.
இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அருண்விஜய் அதற்காக மெனக்கெட்டிருக்கிறார்.தோற்றம் மற்றும் உடைகளில் மட்டுமின்றி நடிப்பிலும் நுட்பமான வேறுபாடுகளைக் காட்டியிருக்கிறார்.சண்டைக்காட்சிகளில் அவர் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
நாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானிக்கு சிற்சில வறியவர்களின் பெரும் மனச்சிக்கலை முன்னிறுத்தும் முக்கியமான வேடம்.மொத்தக் கதையும் அவருடைய பார்வையில் அவரது எண்ணப்படி இயங்குகிறது.அதை உணர்ந்து அதற்கேற்ப நடிக்க முனைந்திருக்கிறார்.
தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் எதிர்பாராத கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.அதற்கேற்ப நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
டிஜோ டாமியின் ஒளிப்பதிவு படத்தை மேன்மையாக்குகிறது.காட்சி வடிவமைப்பு மற்றும் ஒளியமைப்புகள் மிகவும் ஸ்டைலிஷாக அமைந்து இரசிக்க வைத்திருக்கின்றன.
சாம்.சி.எஸ் இசையில் தனுஷ் பாடியுள்ள பாடல் உட்பட எல்லாப் பாடல்களும் கேட்கும் இரகம்.திரைக்கதையின் திருப்பங்களுக்கு பின்னணி இசை பெரிதும் உதவியிருக்கிறது.
பி.சி.ஸ்டண்ட்ஸ் சண்டைப்பயிற்சி படத்துக்குப் பெரும்பலமாக அமைந்திருக்கிறது.ஒவ்வொரு சண்டைக்காட்சியும் மாறுபட்டு வடிவமைக்கப்பட்டிருப்பது நன்று.
படத்தொகுப்பாளர் ஆண்டனி,தன் வழக்கமான பாணியைப் பின்பற்றி படத்தை வேகமாக்கியிருக்கிறார்.பின்பாதியில் இருக்கும் வெகுவேகம் முன்பாதியில் மெதுவேகமாக இருக்கிறது.
பணம் இல்லாதவனுக்கு அதுமட்டும் தான் சிக்கல் பணம் இருக்கிறவனுக்கு எல்லாமே சிக்கல் என்பார்கள்.அந்தக் கருத்துக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லும் வகையில் இப்படம் அமைந்திருக்கிறது.
கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை என்றார் ஒளவைப் பாட்டி.அப்படி இளமையில் வறுமையில் வாடும் ஓர் இளம்பெண்ணின் உளவியலை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன்.
அழுத்தமான மையக்கதையை வைத்துக் கொண்டு வெகுமக்கள் விரும்பும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து படத்தைக் கொடுத்திருக்கிறார்.
– கதிர்











