பிரபல நடிகர் பிரதாப் போத்தன் திடீர் மறைவு – திரையுலகம் இரங்கல்
திரைப்பட இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 70.
1980 ஆம் ஆண்டில், மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தின் மூலம் நடிகராக பிரதாப் போத்தன் அறிமுகமானார். மீண்டும் ஒரு காதல் கதை, ருத்ர பீடம், ஜீவா,வெற்றி விழா,மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி,லக்கி மேன் உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார்.
மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.கடந்தாண்டு வெளியான கமலி ஃப்ரம் நடுக்காவேரி படத்தில் பிரதாப் போத்தன் முக்கியமான வேடத்தில் நடித்து இருந்தார்.
நடிகர்,இயக்குநர்,எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மையைக் கொண்ட பிரதாப் போத்தன் 1980 இல் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ்,தெலுங்கு,மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது, சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது,கேரள மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரதாப் தான் இயக்கிய மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழில் முதல்முறையாக கமலின் வெற்றி விழா படத்தில் ஸ்டெடி கேமராவை பயன்படுத்தியவர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி பிறந்தார். நடிகர் பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்து 1986 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அத்துடன் அமலா சத்யநாத் என்பவரை 1990 ஆம் ஆண்டு மணந்த இவர் 2012 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
பிரதாப் போத்தனின் திடீர் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.











