ஆடை – திரைப்பட விமர்சனம்
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிராங்க் ஷோ நடத்தும் குழுவில் அமலாபால் இருக்கிறார். அந்நிகழ்ச்சியில் அவர்கள் செய்யும் அடாவடிகள் மற்றும் அதன் விளைவுகள்தாம் படம்.
தமிழகத்தின் தென்கோடியில் நடந்த தோள்சீலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மார்பை மறைக்கும் உரிமைக்காக மார்புகளை அறுத்தெறிந்த பெண்ணின் அறிமுகத்தோடு படம் தொடங்குகிறது. அப்படிப் போராடிப் பெற்ற உரிமை இது. அதை அலட்சியம் செய்யாதீர்கள் என்கிற கருத்து சொல்கிறது.
அமலாபால் அதிரடி நாயகியாக அறிமுகம் ஆகிறார். பைக் ரேஸ், மதுப்பழக்கம் என்று இக்கால இளைஞர்களுக்குச் சவால் விடுகிற வேடம். உயர்நடுத்தர வகுப்புப் பெண்களின் பிரதிநிதி போல் இருக்கிறார்.
அதற்கு மிகப்பொருத்தமாக நடித்திருக்கிறார். உடை இல்லாமல் நிர்வாணமாக இருப்பதை உணரும் நேரத்தில் கூனிக்குறுகி போகப்போக இயல்பாக மாறும் அவருடைய உடல்மொழி அவருடைய நல்ல நடிப்புக்குச் சான்று.
ரம்யா, விவேக்பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி, அனன்யா ராம்பிரசாத் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.
விஜய்கார்த்திக்கண்ணனின் ஒளிப்பதிவு கண்ணியமாக இருக்கிறது.
பிரதீப்குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பாடல்வரிகள் படத்தின் கருத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கின்றன.
க்ரைம் த்ரில்லர் படங்களுக்கே உரிய பல்வேறு நபர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி கடைசியில் யாரும் எதிர்பாராத ஒருவரைக் கொண்டுவந்து இவர்தான் காரணம் அதற்கு இதுதான் காரணம் என்கிற திரைக்கதை வடிவம்தான் இந்தப்படத்திலும் இருக்கிறது.
ஒரு எக்ஸாம்தானே என்கிற அமலாபாலின் அலட்சியக் கேள்விக்குப் பொங்கியெழுந்து அனன்யா சொல்லும் பதில்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி.
வயதுவந்தவர்களுக்கான படம் என்பதால் நிறைய இரட்டை அர்த்த வசனங்கள் புழங்குகின்றன. அவை தாராளமாகச் சிரிக்க வைக்கின்றன.
இயக்குநர் ரத்னகுமாருக்கு பெண்ணுரிமை பற்றிய புரிதல் குறைவு என்பதைக் காட்சிகளிலும் வசனங்களிலும் காட்டிவிட்டார்.
அதேநேரம், உடை இல்லாமல் நாயகியை நடிக்க வைத்தாலும் துளி விரசமுமின்றி காட்சிகளை அமைத்து நற்பெயர் பெற்றிருக்கிறார் ரத்னகுமார்.
முதல்பாதியின் சுவாரசியமான திரைக்கதை இரண்டாம் பாதியின் குறைகளை மறக்கடிக்கும் வகையில் நிறைந்திருக்கும் அமலாபால் நடிப்பு ஆகியன படத்துக்குப் பலம்.











