October 17, 2026
விமர்சனம்

தில்லுக்கு துட்டு 2 – திரைப்பட விமர்சனம்

ஒரு குடியிருப்பில் வசிக்கும் எல்லோருக்கும் தொந்தரவாக இருக்கிறார்கள் நாயகன் சந்தானமும் அவரது மாமா நான்கடவுள் ராஜேந்திரனும்.

மதுக்குடித்துவிட்டு அவர்கள் செய்யும் அட்டகாசங்கள் சகிக்க முடியாமல் அக்குடியிருப்பு வாசிகள் எடுக்கும் முடிவால் சந்தானமும் நான்கடவுள் ராஜேந்திரனும் சந்திக்கும் சிக்கல்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

தாடி மீசையுடன் புதிய தோற்றத்தில் படம் முழுக்க வருகிறார் சந்தானம். சில நேரங்களில் தனுஷை நினைவுபடுத்துகிறார்.

மிக அமைதியாக அய்யப்பன் கோயிலுக்கு மாலை போட்டவராக அறிமுகம் ஆகும் சந்தானம் அடுத்த காட்சியிலேயே ஆரம்பிக்கும் அதகளத்தைப் படம் முழுக்கத் தொடர்கிறார்.

செட்தோசை போல் எல்லாக்காட்சிகளிலும் சந்தானத்தின் கூடவே இருக்கும் நான்கடவுள் ராஜேந்திரனும் தன் பங்குக்குச் சிரிக்க வைக்கிறார்.

நாயகி ஷிரிதாசிவதாஸ் அழகான புதுவரவு. சில இடங்களில் நடிக்கவும் செய்கிறார்.

நடன இயக்குநர் சிவசங்கர், இயக்குநர் மாரிமுத்து,ஊர்வசி,விஜய்டிவி ராமர் உட்பட படத்தில் நடித்திருக்கும் எல்லோருமே கவனத்தை ஈர்க்கிறார்கள்.

சபிரின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை. தீபக்குமாரின் ஒளிப்பதிவு படத்துக்குப் பொருத்தம்.

படம் தொடங்கியதிலிருந்தே சிரிப்பு வெடிகள். நிறைய இடங்களில் இரட்டை அர்த்த வசனங்கள். அதிலும் மருத்துவமனை வெளி நோயாளி வசனம் அணுகுண்டு. அதை எப்படி தணிக்கைத் துறையில் அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.

நாயகியிடம் காதல் சொன்னால் வருகிற சிக்கல் புதிது, அதை வைத்துக் கொண்டு படம் நெடுக சிரிப்பலையைச் சிதறவிட்டிருக்கிறார்கள்.

தொடக்கத்தில் அய்யப்பன் சாமியைக் கேலி செய்கிறார்கள். அடுத்தடுத்து கேரள மாந்தீரிகத்தையும் ஆன்மீகத்தையும் ஒருசேரப் போட்டுத்தாக்குகிறார்கள்.

பேய் விரட்டுகிறோம் என்று சொல்பவரும் கடவுளின் பிரதிநிதி என்று சொல்லும் பெண்மணியும் பேயிடம் சிக்கிக்கொண்டு படும்பாடுகள் அட்டகாசம்.

வாய்விட்டுச் சிரிக்க வைப்பதோடு, சுடுகாட்டுப்பூசையில் இருப்பவரிடம் சந்தானம் பெண் கேட்கும் காட்சியைச் சிறப்பாகப் படமாக்கி மூடநம்பிக்கையில் இருப்பவர்களுக்கு சவுக்கடி கொடுத்திருக்கும் இயக்குநர் ராம்பாலா பாராட்டுக்குரியவர்.

இந்தப் பாதையும் பயணமும் சந்தானத்துக்குப் பெரும்பலம்.அவரும் அடித்து ஆடியிருக்கிறார்.

என் வாழ்க்கைய முடிக்கணும்னு பிளான் பண்ணீனீங்க அதுவே எனக்கு நல்ல ஆரம்பத்தைக் கொடுத்திருக்கிறது என்று படத்தில் வசனம் பேசுகிறார் சந்தானம்.

அது நிஜத்திலும் நடக்கும் என்று நம்பிக்கையாகச் சொல்லலாம்.

Related Posts