குப்பத்து ராஜா – திரைப்பட விமர்சனம்
சென்னையிலுள்ள ஒரு குடியிருப்பை மையமாக வைத்து,
அங்கு வசிக்கும் பல்வேறு விதமான ஆட்கள். அவர்களுக்குள்ளான உறவு, பிரிவு, கோபம் ஆகிய எல்லாவற்றையும் கலந்து ஒரு மார்வாரி வில்லனை வைத்து அக்மார்க் கமர்ஷியல் கதை சொல்ல நினைத்திருக்கிறார்கள்.
அங்கு முக்கியமான ஆள் பார்த்திபன் அவருக்கு எதிராகச் செயல்படும் எண்ணம் கொண்டவர் ஜீ.வி.பிரகாஷ். இவர்கள் இருவருக்கும் மோதல். அவற்றில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படம்.
குப்பத்துராஜா என்கிற பெயருக்கு நூறு விழுக்காடு நியாயம் செய்கிற மாதிரி பாத்திரப்படைப்புகளும் வசனங்களும் இருக்கின்றன.
எம்ஜிஆர், ஊர்நியாயம், ராக்கெட், கைசாமான், மேலோகம் என்கிற பெயர்களும் படத்துக்கு வலுச்சேர்க்கின்றன.
ராக்கெட் என்கிற கதாபாத்திரத்துக்கு மிகப்பொருத்தமாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள். சில இடங்களில் நடித்திருக்கிறார்.
பாலக்லால்வாணி பூனம்பாஜ்வா ஆகிய இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள்.
ஜீ.வியுடன் காதல் மோதல் அம்மாவுடன் சண்டை ஆகிய எல்லாவற்றிலும் தேர்ர்சி பெறுகிறார் பாலக்லால்வாணி .
கவர்ச்சிப் பதுமையாக பூனம்பாஜ்வா. அங்கங்கே அங்கங்களைக் காட்டி படத்தில் வருகிறவர்களையும் பார்க்கிறவர்களையும் வழிய விடுகிறார்.
பார்த்திபனுக்கு முக்கியமான வேடம். ஒரு தபாதான் சொல்லுவேன் ஒவ்வொரு தபாவும் சொல்லமாட்டேன் என்று சொல்வதோடு நிறுத்தாமல் பொறுப்புடன் செயல்படவேண்டிய வேடம். நன்றாகச் செய்திருக்கிறார்.
ஜீ.வியின் அப்பாவாக வருகிற எம்.எ.ஸ்,பாஸ்கருக்குக் கவனிக்கத்தக்க வேடம்.
நகைச்சுவைக்கு யோகிபாபு. முற்றிலும் ஏமாற்றாமல் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்.
மகேஷ்முத்துச்சமியின் ஒளிப்பதிவில் ஒரு குப்பத்துக்குள் போய் சில நாட்கள் இருந்துவிட்டு வந்த உணர்வு தோன்றுகிறது.
ஜீ.வியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை போதவில்லை.
நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கியிருக்கிறார். அவருக்கு நடிகர்களிடம் வேலை வாங்கத் தெரிந்திருக்கிறது.
ஒரு நியாயமான கதை எதிர்பாராத வில்லன் நல்ல நடிகர்கள் ஆகியன இருந்தும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான காட்சிகள் கொண்ட திரைக்கதையால் படம் அலுப்பூட்டுகிறது.











