விமர்சனம்

தனுஷை கவிழ்த்த கார்த்திக்சுப்புராஜ் – ஜெகமே தந்திரம் சோதனை

ஜகமே தந்திரம்

ரயில் தண்டவாளத்தின் குறுக்கே காரை நிறுத்தி, பிறகு ரயிலை நிறுத்தி, ரயில் ஓட்டுநர் எந்தப் பெட்டியென்று சொல்ல… அங்கே போய் நிதானமாக ஒருவரைக் கொன்றுவிட்டு வருகிறார் தனுஷ். பயங்கர தாதாவாம். (ஒன்றிய அரசின் கவனம் பெற்றால் இயக்குநர் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்).

தனுஷ் அறிமுகமே நகைச்சுவைக் காட்சியாகத்தான் தொடங்குகிறது. பின்னர், படம் முழுவதிலும் இப்படியான காட்சிகளை விரவியிருக்கிறார், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். தங்குதடையற்ற மனமிருந்தால்தான் பார்க்க முடியும்.

இது ஆங்கிலப் படமா, தமிழ்ப் படமா என்ற குழப்பத்திலேயே கடைசி வரை ரசிகர்களைத் தவிப்பில் வைத்திருக்கும் இயக்குநரின் திறமை நம்மை வியக்க வைக்கிறது.

ஓராண்டுக்கு முன்பு வந்த “ஜோக்கர்” உள்பட பல ஆங்கில மற்றும் தமிழ்ப் படங்களின் காட்சிகள் அடுத்தடுத்து நினைவுக்கு வந்தால், நீங்கள் திரைப்படங்கள் நிறைய பார்ப்பவர் என்றே புரிந்துகொள்தல் நலம்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் “துரோகிகள்” என்ற எதிர்மறைக் கருத்தை பார்வையாளன் மனத்தில் ஊன்றிவிடும் அபாயத்தை படம் தாங்கியிருக்கிறது.

வளர்ச்சி பெற்ற ஜி-7 நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில், சட்டம்-ஒழுங்கு எவ்வாறு சீர்குலைந்திருக்கும் என்பதைக் காட்சிகளில் புலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

நெட்ஃபிளிக்ஸில் பார்ப்பதால், நாமே இரண்டு முறைக்கு மேல் இடைவேளை விட்டும், தந்திரம்… முடிந்தபாடில்லை.

கிளைமாக்ஸ் எனப்படும், ஒருவழியாக படம் உண்மையிலேயே முடிவுக்கு வரும் (158 நிமிடங்கள்), இறுதிக் காட்சிகளில் தனுஷ் வேட்டி சட்டையுடன், தோளில் நவீன ரக துப்பாக்கி தொங்க, இரண்டு கைகளிலும் தனித் தனித் துப்பாக்கிகள் என எதிரியை அழித்தொழிக்க முன்னேறுகிறார். வேட்டி என்பது வீரத்தின் அடையாளம் என்பதை இயக்குநர் அங்கே குறியீடாகச் சொல்கிறார்.

அசுரன், பக்கிரி, பட்டாசு, கர்ணன் என்று தனுஷின் செல்திசை (கௌதம் வாசுதேவ மேனனின் “எனை நோக்கி பாயும் தோட்டா” தவிர) நன்றாக இருந்தது.

பால் பாத்திரத்தைக் காலால் தட்டிவிட்டுக் கவிழ்த்தது போல, கார்த்திக் சுப்பராஜ் “சிறப்பாக” செய்துவிட்டார். மீள வேண்டும், தனுஷ்.

ஜகமே தந்திரம்… வெண்ணெய் வெட்டி.

– இளையபெருமாள் சுகதேவ்

Related Posts