ஈழத்தமிழர்களைக் கொச்சைப்படுத்திய தனுஷ் – கடும் எதிர்ப்பு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தைத் தயாரித்திருக்கிறது.
இந்தப்படம், ஜூன் 18 அன்று நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று மதியம் 12.30 மணிக்கு படம் வெளியானது.
படம் மிகவும் போரடிப்பதாகச் சொல்லப்படுகிறது.
கவிஞர் மனுஷ்யபுத்திரன் இதுகுறித்து எழுதியிருப்பதாவது…
ஜகமே தந்திரம் படம் மூன்று நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் உணர்வு.
இடையில் நான்கைந்து முறை தூங்கி எழுந்துவிட்டேன். வழக்கமான அளவிலேயே எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை இவ்வளவு நீளமான திரைப்படமாக உணரச் செய்ய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஏதோ ஒரு புதுமையை இதில் பயன்படுத்தியிருக்கிறார். அந்த அடிப்படையில் இந்தப்படம் கின்னஸில் இடம்பெற வாய்புள்ளது.
இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.
இதுமட்டுமின்றி படத்தில் ஈழத்தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாகக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றனவாம்.
இதுபற்றி சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதாவது…
ஜெகமே தந்திரம் மிக மிக ஆபத்தான படம். முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றும் கூட. ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பது போல பாசாங்கு செய்து அந்த மக்களுக்கு ஊறு விளைவிக்கிற அரசியல் பேசுகிறது. ஐரோப்பிய ஆஸ்திரேலியா கனடா மாதிரி நாடுகள் ஈழ அகதிகளை வெளியேற்ற இப்படம் உதவக்கூடும்.
என்றும்,
அகதிகளை உள்ளே விட்டால் அவர்கள் கூடி கேங்ஸ்டராகி உள்ளூர் மக்கள் மீதே குண்டுவைப்பார்கள் என்று காட்டுகிறார்கள். யாருக்கு சாதகமா படமெடுக்கிறோம்ன்னே குழம்பிட்டாங்க போல!
என்றும் பதிவிட்டுவருகிறார்கள்.
கார்த்திக்சுப்புராஜுக்கும் தனுஷுக்கும் ஏன் இந்த வேலை? என்று பலரும் விமர்சித்துவருகிறார்கள்.










