அடுத்தடுத்து புகைபிடிக்கும் காட்சிகள் – லியோ படக்குழு என்ன நினைக்கிறது?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய்தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
‘லியோ’ படத்தின் முதல் பாடலான `நா ரெடி’ பாடல், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. அப்பாடலில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அது மிகவும் சர்ச்சைக்குள்ளானது.
காவல்துறையிடம் புகார் கொடுக்கும் அளவுக்கு அச்சிக்கல் நீண்டது.
சமுதாய அக்கறையுடன் எழுந்த இந்த எதிர்ப்பைப் படக்குழு மதிக்கவில்லை.
ஜூலை 29 அன்று லியோ படத்தில் நடித்துள்ள இந்திநடிகர் சஞ்சய்தத்தின் பிறந்தநாள். அதையொட்டி அவர் லியோ படத்தில் நடித்த காட்சியை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர். அதில் நடிகர் சஞ்சய்தத் புகைபிடித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் அர்ஜூனின் பிறந்தநாளான ஆகஸ்ட் 15 அன்று அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக, லியோ படத்தின் புதிய காணொலி வெளியிடப்பட்டது. அதிலும் அர்ஜூன் புகைபிடித்துக் கொண்டே தோன்றுகிறார்.
விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிக்கு எதிர்ப்பு வந்தது. ஆனால் சஞ்சய்தத், அர்ஜுன் ஆகியோர் புகைபிடித்துக் கொண்டே தோன்றியதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
திரைப்படங்கள் இளம்வயதினர் மத்தியில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் அவற்றில் புகைபிடிக்கும் காட்சிகளை வைக்கவேண்டாம் என சமுதாய ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ஆனால், அவற்றைச் சிறிதும் மதியாமல் அடுத்தடுத்து புகைபிடிக்கும் காட்சிகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறது லியோ படக்குழு.
நாங்கள் அப்படித்தான் செய்வோம் உங்களால் என்ன செய்யமுடியும்? என்று கேட்பது போல் அவர்களுடைய செயல் இருக்கிறது.
புகைபிடிப்பதை எதிர்ப்போர் அவர்களுடைய சுயநலத்துக்காக அதைச் செய்யவில்லை, லியோ படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் குடும்பம் உள்ளது. குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களுக்கும் சேர்த்துத்தான் பேசுகின்றனர் என்பதை உணர்ந்தால் நல்லது.











